தேனி அருகே ஆட்டோ டிரைவரின் மனைவி அடித்து கொலை


தேனி அருகே ஆட்டோ டிரைவரின் மனைவி அடித்து கொலை
x
தினத்தந்தி 10 Aug 2017 4:30 AM IST (Updated: 10 Aug 2017 12:11 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே ஆட்டோ டிரைவரின் மனைவி அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி,

பெரியகுளம் அருகே உள்ள இந்திரபுரி பகுதியை சேர்ந்தவர் சவுந்திரபாண்டி. ஆட்டோ டிரைவர். அவருடைய மனைவி அழகுமீனா (வயது 25). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்தநிலையில் கணவன்–மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது.

இதனால் கணவரை விட்டு பிரிந்த அழகுமீனா, தேனி அருகே குன்னூர் கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் கடந்த 6 மாதங்களாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் செல்போனில் பேசியபடி அழகுமீனா வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவருடைய பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் குன்னூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் கழுத்தில் காயங்களுடன், மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் நேற்று காலை அழகுமீனா பிணமாக கிடந்தார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் க.விலக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர் அழகுமீனாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அழகுமீனாவின் தாயார் பாண்டியம்மாள் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அழகுமீனாவை, யாரோ மர்மநபர் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.

மேலும் அவரை கொலை செய்தது யார்? அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அழகுமீனாவிடம் செல்போனில் பேசியது யார்? என்பது குறித்து க.விலக்கு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story