பேட்மிண்டன் வீராங்கனை தற்கொலை: நீதி விசாரணை கோரி கல்லூரி மாணவ–மாணவிகள் போராட்டம்


பேட்மிண்டன் வீராங்கனை தற்கொலை: நீதி விசாரணை கோரி கல்லூரி மாணவ–மாணவிகள் போராட்டம்
x
தினத்தந்தி 10 Aug 2017 3:46 AM IST (Updated: 10 Aug 2017 3:46 AM IST)
t-max-icont-min-icon

பேட்மிண்டன் வீராங்கனை தற்கொலை குறித்து நீதி விசாரணை கோரி கல்லூரி மாணவ–மாணவிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.

மங்களூரு,

பேட்மிண்டன் வீராங்கனை தற்கொலை குறித்து நீதி விசாரணை கோரி கல்லூரி மாணவ–மாணவிகள் நேற்று தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள கட்டீல் பகுதியை சேர்ந்தவர் காவ்யா(வயது 16). இவர் மூடுபித்ரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். மேலும் பள்ளியின் விடுதியில் தங்கியும் இருந்தார். காவ்யா பேட்மிண்டன் வீராங்கனையும் ஆவார். இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காவ்யா விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மூடுபித்ரி போலீசார் அவரின் உடலை மீட்டு விசாரித்தனர். மேலும் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காகவும் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் காவ்யா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவருடைய சாவில் மர்மம் இருப்பதாகவும் கூறி அவருடைய பெற்றோர் மூடுபித்ரி போலீசில் புகார் அளித்தனர். மேலும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரான பிரவீன் காவ்யாவுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தொல்லை கொடுத்து வந்ததாகவும், அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும் காவ்யாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவருடைய சாவு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் பல்வேறு இடங்களில் மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் கூட காவ்யாவின் சொந்த ஊரான கட்டீலில் அவருடைய சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று காவ்யாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவருடைய மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ–மாணவிகள் தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மாணவ–மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்து மங்களூரு மாநகராட்சி மேயர் கவிதா சனிலும் கலந்துகொண்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் ஜெகதீஷ், விரைந்து வந்து போராட்டம் நடத்திய மாணவ–மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவ–மாணவிகள் காவ்யாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும் தங்களின் கோரிக்கை மனுவையும் அவரிடம் கொடுத்தனர்.

அந்த மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டரும், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்பின்னர் மாணவ–மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்னதாக, கல்லூரி மாணவ–மாணவிகள் ஜோதி சர்க்கிளில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அடைந்தனர்.

‘இது நீதிக்கான போராட்டம்‘– மங்களூரு மாநகராட்சி மேயர் கவிதா சனில்.

கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட மங்களூரு மாநகராட்சி மேயர் கவிதா சனில் நிருபர்களிடம் கூறுகையில், “நான் இந்த ஊர்வலத்தில் மங்களூரு மாநகராட்சி மேயராக கலந்து கொள்ளவில்லை. காவ்யாவின் ஆதரவாளராக கலந்துகொண்டுள்ளேன். நான் காவ்யாவின் வீட்டிற்கு சென்றிருந்தபோது அவருடைய பெற்றோர், காவ்யாவின் மரணம் குறித்து பல கேள்விகளை கேட்டனர். அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட வேண்டும்.

இந்த விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று அரசியல் கட்சி தலைவர்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். ஏனெனில் இது நீதிக்கான போராட்டமாகும். நானும் ஒரு தேசிய விளையாட்டு வீராங்கனை தான். தேசிய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் ஒருபோதும் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள். காவ்யா தற்கொலை செய்து கொண்டார் என்பது ஏற்ககூடியது அல்ல. அவர் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்“ என்றார்.


Next Story