தூத்துக்குடி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்


தூத்துக்குடி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Aug 2017 2:45 AM IST (Updated: 11 Aug 2017 8:49 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடத்த முயற்சி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக அவ்வப்போது செம்மரக்கட்டைகள் கடத்தப்பட்டு வந்தன. இதனால் சுங்கத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் தருவைகுளம் அருகே இருந்து படகு மூலம் இலங்கைக்கு செம்மரக்கட்டைகளை கடத்துவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுங்கத்துறையினர் கடற்கரைக்கு விரைந்து சென்றனர்.

இதனை அறிந்த கடத்தல்காரர்கள் செம்மரக்கட்டை ஏற்றி வந்த மினிலாரியுடன் கடற்கரைக்கு செல்லாமல் நைசாக தப்பி சென்று விட்டார்களாம். இதனால் அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, புதுக்கோட்டை அருகே தம்பிக்கை மீண்டான் பகுதியில் உள்ள ஒரு குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

பறிமுதல்

அதன்பேரில் சுங்கத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு தலைவர் வருண் ரங்கசாமி, சுங்கத்துறை கண்காணிப்பாளர் செந்தில்நாதன் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விரைந்து சென்றனர். அங்கு லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான குடோனில் டிரம்களுக்கு இடையே செம்மரக்கட்டைகள் மற்றும் பீடி இலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. உடனடியாக அதிகாரிகள் அங்கு இருந்த 3½ டன் செம்மரக்கட்டைகள் மற்றும் 10 மூடை பீடி இலைகளையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் வடமாநிலங்களில் இருந்து தூத்துக்குடிக்கு செம்மரக்கட்டை மற்றும் பீடி இலைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்த செம்மரக்கட்டைகள் இலங்கை வழியாக மலேசியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கும், பீடி இலைகள் இலங்கைக்கும் படகு மூலம் கடத்துவதற்கான முயற்சி நடந்துள்ளது.

இந்த முயற்சி முறியடிக்கப்பட்டதால், புதுக்கோட்டை அருகே உள்ள குடோனில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த கடத்தல் முயற்சியில் தூத்துக்குடியை சேர்ந்த முக்கியபுள்ளிகள் ஈடுபட்டு இருக்கலாம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து செம்மரக்கட்டைகளை கடத்த முயன்றவர்களை பிடிக்க சுங்கத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story