கூடலூர் அருகே கோவில் முன் குட்டியுடன் நின்ற யானை; பூசாரி அலறியடித்து ஓட்டம்


கூடலூர் அருகே கோவில் முன் குட்டியுடன் நின்ற யானை; பூசாரி அலறியடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 12 Aug 2017 4:30 AM IST (Updated: 11 Aug 2017 11:00 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே கோவில் முன் குட்டியுடன் நின்ற யானை கதவு, ஜன்னல்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. இதை பார்த்து பூஜைக்கு வந்த பூசாரி அலறியடித்து ஓட்டம் பிடித்தார்.

கூடலூர்,

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகரில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று ஆடி வெள்ளி என்பதால் காலை 6 மணிக்கு கோவில் பூசாரி வடிவேலு (வயது 48) என்பவர் பூஜை செய்வதற்காக கோவிலை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது கோவிலின் முன்பாக குட்டியுடன் ஒரு காட்டு யானை நின்றிருந்தது. இதனால் பயந்து போன பூசாரி வடிவேலு அங்கிருந்து அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தார். கோவில் முன் யானைகள் இருப்பதை அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தெரிவித்தார்.

இதனை அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து சத்தம் போட்டும், தாரை தப்பட்டை அடித்தும் காட்டு யானைகளை விரட்டினர். யானைகள் சென்ற பிறகு பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.

அப்போது கோவிலின் நுழைவு வாயில் போடப்பட்டு இருந்த இரும்பு கதவு, ஜன்னல்களை காட்டு யானை உடைத்து சேதப்படுத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் காட்டு யானை சுவரை இடித்து தள்ளியதால் கோவில் உள்ளே இருந்த பீரோவும் சரிந்து விழுந்து கிடந்தது.

ஆடி வெள்ளி சிறப்பு பூஜைக்காக வைத்திருந்த பச்சரிசி, கடலை, தேங்காய் உள்ளிட்ட பொருட்களையும் காட்டு யானைகள் தின்றது தெரிய வந்தது. அம்மன் கோவிலை காட்டு யானை சூறையாடிய சம்பவம் பக்தர்கள், பொதுமக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஓவேலி வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, காட்டு யானைகளால் நாளுக்குநாள் தொந்தரவு ஏற்பட்டு வருகிறது. காட்டு யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தும் அதனை விரட்ட நடவடிக்கை எடுப்பது இல்லை. இரவு நேரம் ஆனதும் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே யானைகளிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பின்னர் கோவிலில் வழக்கம் போல் பூஜைகள் நடைபெற்றது. இருப்பினும் பக்தர்கள் பீதியுடன் கோவிலுக்கு வந்து சென்றனர்.


Next Story