கோவை–திருப்பத்தூர் இடையே 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி இரட்டை அடுக்கு ரெயில் சோதனை
கோவை–திருப்பத்தூர் இடையே இரட்டை அடுக்கு ரெயில் பெட்டியுடன் இணைக்கப்பட்ட ரெயில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
கோவை,
கோவை–பெங்களூரு இடையே ‘உதய்’ எக்ஸ்பிரஸ் ரெயில் விரைவில் இயக்கப்பட உள்ளது. அந்த ரெயிலில் இரட்டை அடுக்கு ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. அந்த ரெயிலை இயக்குவதற்கு முன்பு கோவை–திருப்பத்தூர் இடையே உள்ள ரெயில் பாதையில் சோதனை ஓட்டம் நடத்த ரெயில்வே இலாகா முடிவு செய்தது. இதற்காக சென்னை–பெங்களூரு இடையே ஓடிக் கொண்டிருந்த இரட்டை அடுக்கு ரெயில் பெட்டிகள் இரண்டு நேற்று முன்தினம் கோவை கொண்டு வரப்பட்டன.
அந்த இரண்டு பெட்டியுடன் என்ஜின் இணைக்கப்பட்டது. அதில் ரெயில்வே துறையின் தொழில்நுட்ப பிரிவு என்ஜினீயர்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சென்றனர். சோதனை ஓட்ட ரெயில் நேற்றுக்காலை 7.30 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டது. அது திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக திருப்பத்தூருக்கு நேற்று மதியம் 2.45 மணிக்கு சென்றடைந்தது. அதன்பின்னர் அந்த ரெயில் மாலை 4.10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு நேற்று மாலை 6.30 மணிக்கு சேலம் வந்தடைந்தது. அந்த ரெயில் இன்று(சனிக்கிழமை) காலை 9 மணிக்கு சேலத்திலிருந்து புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இன்று பகல் 12.35 மணிக்கு மீண்டும் கோவை வந்தடைகிறது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
கோவை–பெங்களூரு ரெயில் மார்க்கத்தில் இதுவரை இரட்டை அடுக்கு ரெயில் பெட்டிகள் இயக்கப்படவில்லை. இரட்டை அடுக்கு ரெயில் பெட்டிகள், சாதாரண ரெயில் பெட்டிகளை விட நீளம் மற்றும் உயரம் சற்று அதிகம் உள்ளவை. எனவே இரட்டை அடுக்கு ரெயில் பெட்டிகள் ரெயில் நிலையங்களுக்குள் செல்லும் போது நடைபாதை ரெயில் பெட்டியில் இடிக்கிறதா? ரெயில் பாதையில் உள்ள பாலங்களில் எந்த இடையூறும் இல்லாமல் ரெயில் செல்கிறதா? ரெயில் பெட்டியின் மேல் செல்லும் உயர் அழுத்த மின்சார கம்பி ரெயில் பெட்டியில் உரசுகிறதா? ஆகியவற்றை தெரிந்து கொள்ள 2 இரட்டை அடுக்கு ரெயில் பெட்டிகளின் பக்கவாட்டிலும், மேற்புறத்திலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அந்த காட்சிகள் பெட்டிக்குள் இருந்த கணினியில் தெரிந்தது. அதை சோதனை ஓட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்த சோதனை ஓட்டத்தின்போது இரட்டை அடுக்கு பெட்டியுடன் இணைக்கப்பட்ட ரெயில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. இந்த சோதனையின்போது ரெயில் பெட்டி எங்கும் இடிக்கவில்லை. மேலே செல்லும் மின்சார கம்பியும் ரெயில் பெட்டியில் உரசவில்லை.
கோவை–பெங்களூரு இடையே உள்ள ரெயில் பாதையில் ஏராளமான வளைவுகள் உள்ளன. அந்த வளைவுகளில் சாதாரண பெட்டியை விட சற்று நீளமாக உள்ள இரட்டை அடுக்கு ரெயில் பெட்டி எந்த சிரமமும் இல்லாமல் திரும்புகிறதா? என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது.
சோதனை ஓட்ட ரெயில் இன்று(சனிக்கிழமை) கோவை வந்து சேரும். அதன்பின்னர் இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்தது குறித்து ரெயில்வே பாதுகாப்பு ஆணையாளருக்கு அறிக்கை அனுப்பப்படும். அந்த அறிக்கை ஆய்வு செய்யப்பட்ட பின்னர் கோவை–பெங்களூரு இடையே இரட்டை அடுக்கு பெட்டியுடன் உதய் எக்ஸ்பிரஸ் இயக்கப்படும்.
சோதனை ஓட்டம் கோவையிலிருந்து திருப்பத்தூர் வரை நடத்தப்பட்டது. ஏன் என்றால், ஏற்கனவே சென்னை–பெங்களூரு இடையே இயக்கப்படும் இரட்டை அடுக்கு ரெயில் பெட்டி திருப்பத்தூர் வழியாக பெங்களூரு சென்று வருகிறது. திருப்பத்தூருக்கு அடுத்து பெங்களூரு வரை உள்ள ரெயில்பாதையில் ஏற்கனவே இரட்டை அடுக்கு ரெயில் பெட்டி இயக்கப்பட்டு வருவதால் தற்போது கோவையிலிருந்து திருப்பத்தூர் வரை மட்டுமே சோதனை ஓட்ட ரெயில் இயக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.