சிறையில் பெண் கைதி கொலை: பைகுல்லா ஜெயில் கண்காணிப்பாளர் பணி இடைநீக்கம்
சிறையில் பெண் கைதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பைகுல்லா ஜெயில் கண்காணிப்பாளரை பணி இடைநீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டது.
மும்பை,
சிறையில் பெண் கைதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அலட்சியமாக இருந்ததாக கூறி பைகுல்லா ஜெயில் கண்காணிப்பாளரை பணி இடைநீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
மும்பை பைகுல்லா சிறையில் கடந்த ஜூன் மாதம் மஞ்சுளா என்ற பெண் கைதி அடித்து கொலை செய்யப்பட்டார். சிறை அதிகாரிகளால் அவர் உடல்ரீதியாக சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. எனவே அவரை துன்புறுத்திய ஜெயிலர் மனிஷா, சிறை காவலர்கள் பிந்து, வாசிமா சேக், சீத்தல், சுரேக்கா, ஆர்த்தி ஆகிய 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர்.இந்தநிலையில், கைதி மஞ்சுளா சாவு தொடர்பாக புகார் கொடுத்தவர்களில் ஒருவரான வக்கீல் நிதின் சாபுதே என்பவர், கைதி மஞ்சுளா கொலை வழக்கு தடயங்களை அழித்ததாக கூறி ஜெயில் கண்காணிப்பாளர் சந்திரமணி இந்துல்கர் மற்றும் சிறைத்துறை டி.ஐ.ஜி. சுவாதி சாதே ஆகியோர் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை மனு தாக்கல் செய்தார்.
இந்தநிலையில், பெண் கைதி மஞ்சுளா சாவு தொடர்பான அறிக்கையை சம்பவம் நடந்து 2 நாட்கள் ஆன பின்னரும் ஜெயில் கண்காணிப்பாளர் சந்திரமணி இந்துல்கர் சமர்ப்பிக்கவில்லை. இந்த சம்பவத்தில், தனது பணியில் அலட்சியமாக இருந்ததாக அவர் மீது ஒரு மாதத்திற்கு பிறகு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.ஜெயில் கண்காணிப்பாளர் சந்திரமணி இந்துல்கரை மாநில அரசு பணி அதிரடியாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது. இதை சிறைத்துறை ஐ.ஜி. ராஜ்வர்தன் சின்கா உறுதிப்படுத்தினார்.
கைதி மஞ்சுளா சாவு தொடர்பாக தவறான மருத்துவ அறிக்கை சமர்ப்பித்த ஜே.ஜே. அரசு மருத்துவமனை டாக்டர் விஸ்வாஸ் ரோகேவும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.