முறைகேடு புகார் எதிரொலி மந்திரி பிரகாஷ் மேத்தா மீது லோக்அயுக்தா விசாரணை
வீட்டுவசதி துறை மந்திரி பிரகாஷ் மேத்தா மீது லோக்அயுக்தா விசாரணை நடத்த முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தர விட்டார்.
மும்பை,
குடிசை சீரமைப்பு திட்டத்தின்கீழ் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், வீட்டுவசதி துறை மந்திரி பிரகாஷ் மேத்தா மீது லோக்அயுக்தா விசாரணை நடத்த முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.
மராட்டிய வீட்டுவசதி துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான பிரகாஷ் மேத்தா தெற்கு மும்பை தார்டுதேவ் பகுதியில் உள்ள எம்.பி.மில்ஸ் காம்பவுண்டு குடிசை சீரமைப்பு திட்டத்தில் விதிமுறை மீறலில் ஈடுபட்டதாகவும், இதனால் ரூ.500 கோடி வரை ஊழல் புரிந்ததாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.அதோடு, குடிசை சீரமைப்பு திட்ட பயனாளிகளின் பட்டியலில் மந்திரி பிரகாஷ் மேத்தாவின் மகன் பெயரும், உறவினர்களின் பெயரும் இடம்பெற்றிருந்ததாக எதிர்க்கட்சியினர் அடுத்த குற்றச்சாட்டை முன்வைத்தனர். அத்துடன், விசாரணை நிறைவடையும் வரையில், அவர் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பி சட்டசபையை 2 வாரமாக முடக்கினர்.
இதனால், அரசியல் களம் சூடுபிடித்தது. இந்த நிலையில், நேற்று மராட்டிய மேல்–சபையில் இந்த விவகாரம் மீது எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அத்துடன், மந்திரி பிரகாஷ் மேத்தா மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதில் அளித்து கூறியதாவது:–எம்.பி.மில்ஸ் காம்பவுண்டு பிரச்சினையை நான் ஆழமாக தோண்ட தோண்ட ஏராளமான எலும்புக்கூடுகள் (சிக்கல்கள்) வெளிப்பட்டன. இது ஏன் இன்னொரு ‘ஆதர்ஷ்’ ஊழலாக இருக்க கூடாது? என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்.
எம்.பி.மில்ஸ் காம்பவுண்டு பகுதியில் கட்டுமான பணி நடைபெற ஒப்புதல்கள் அனைத்தும் கடந்த 1999 முதல் 2004–ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்டிருக்கின்றன. சொத்து ஆவணப்படி, குறிப்பிட்ட அந்த நிலம் ராணுவ அமைச்சகத்துக்கு சொந்தமானது. அப்படி இருக்கும்போது, அங்கு கூடுதல் கட்டிடங்கள் எழுப்ப முந்தைய அரசு எப்படி அனுமதி அளிக்க முடியும்?.குறிப்பிட்ட இந்த வழக்கில் எந்தவொரு முடிவும் எடுக்காத போதிலும், வீட்டுவசதி துறை மந்திரி பிரகாஷ் மேத்தா மீது எதிர்க்கட்சிகள் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகள் பற்றியும் லே£க்அயுக்தா விசாரணைக்கு உத்தரவிடுகிறேன்.
இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.
இதனிடையே, தொழில்துறை மந்திரி சுபாஷ் தேசாய் மீதான நில முறைகேடு புகார் பற்றியும் லோக்அயுக்தா பரிசீலிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.