ஊட்டி, கோத்தகிரி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
ஊட்டி, கோத்தகிரி பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், அதன் அழகு மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் உள்ள பேக்கரிகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், மளிகைக்கடைகளில் 51 மைக்ரான் அளவுக்கு மேல் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 51 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
அதன் ஒரு பகுதியாக ஊட்டி நகராட்சி சார்பில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை சுகாதார பணியாளர்கள் தரம் பிரித்து வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதுபோல், கடைகள், பேக்கரிகள், ஓட்டல்கள் மற்றும் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்து சுகாதார பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அதனை தொடர்ந்து நகராட்சி கமிஷனர் ரவி (பொறுப்பு) உத்தரவின் பேரில், நகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் நகராட்சி மார்கெட்டில் உள்ள 75 கடைகளில் திடீரென நேற்று சோதனை மேற்கொண்டனர். அதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் பிங்கர்போஸ்ட் சந்திப்பு மற்றும் லவ்டேல் சந்திப்பு பகுதிகளில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா? என்று சோதனை நடத்தினர். மேற்கண்ட சோதனைகளில் மொத்தம் 1½ கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதாக ரூ.2 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
கோத்தகிரி மார்க்கெட் மற்றும் நகர் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என அதிகாரிகள் நேற்று சோதனை செய்தனர். கோத்தகிரி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கண்ணன் தலைமையில் அலுவலர்கள் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். கடைகளில் 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பாலித்தீன் பைகள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளதா? என்று கருவி மூலம் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த சோதனையின்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தட்டு மற்றும் டம்ளர்கள் 2 கடைகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், அந்த கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து அந்த கடை உரிமையாளர்களிடம் மொத்தம் 2 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் கண்ணன் தெரிவிக்கையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதும், பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றமாகும். இந்த பொருட்களை விற்பனை செய்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அபராம் விதிக்கப்படும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.