விருகம்பாக்கத்தில் பெண் போலீஸ் மீது தாக்குதல் வாலிபரை பிடித்து விசாரணை
விருகம்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் புகுந்து பெண் போலீசை தாக்கிய வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி,
விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் போலீஸ் ஒருவர் அருகில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டில் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டது.
உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது வீட்டிற்கு வெளியே கதவு தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. பின்னர் கதவை திறந்து பார்த்தபோது அந்த பெண் போலீசின் பல் உடைந்து ரத்தம் கொட்டியபடி அழுதுகொண்டு இருந்தார். மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து தன்னை தாக்கி செயினை பறித்துச்சென்று விட்டதாக அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது மர்ம வாலிபர் ஒருவர் போலீஸ் குடியிருப்புக்குள் இருந்த மோட்டார் சைக்கிளை எடுக்க முயன்றார். உடனே அந்த வாலிபரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். எனவே அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இதில், பெண் போலீசை தாக்கிய மர்ம நபர் அவர்தான் என தெரியவந்தது.
மீஞ்சூரை சேர்ந்த மகேஷ்வரனான என்ற அவருக்கும், கணவரை பிரிந்து வாழ்ந்த அந்த பெண் போலீசுக்கும் இடையே ஏற்கனவே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு பெண் போலீசின் வீட்டிற்கு வந்த மகேஷ்வரன், அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த மகேஷ்வரன் பெண் போலீசின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதில் அவரது பல் உடைந்து ரத்தம் கொட்டியதால் பயந்து போன மகேஷ்வரன் வீட்டின் கதவை வெளிப்புறமாக சாத்தி விட்டு சென்று உள்ளார்.
பின்னர் மோட்டார் சைக்கிளை எடுக்க வரும்போது போலீசாரிடம் சிக்கி கொண்டதும், இந்த விஷயம் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக அந்த பெண் போலீஸ் மர்ம நபர் தன்னை தாக்கி செயினை பறித்து சென்று விட்டதாக நாடகம் ஆடியதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
போலீஸ் குடியிருப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.