பொன்மலை-தஞ்சாவூர் இருவழிப்பாதை பணி டிசம்பருக்குள் நிறைவடையும் கோட்ட ரெயில்வே மேலாளர் தகவல்


பொன்மலை-தஞ்சாவூர் இருவழிப்பாதை பணி டிசம்பருக்குள் நிறைவடையும் கோட்ட ரெயில்வே மேலாளர் தகவல்
x
தினத்தந்தி 15 Aug 2017 11:00 PM GMT (Updated: 2017-08-16T02:59:44+05:30)

பொன்மலை-தஞ்சாவூர் இடையேயான இருவழிப்பாதை பணி வருகிற டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று சுதந்திர தின விழாவில் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் உதயகுமார் ரெட்டி கூறினார்.

திருச்சி,

திருச்சி கோட்ட ரெயில்வே சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நேற்று காலை கல்லுக்குழி ரெயில்வே மைதானத்தில் நடந்தது. இந்த விழாவில் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் உதயகுமார் ரெட்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தார். ரெயில்வே பாதுகாப்பு படைவீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

பின்னர் கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி பேசும்போது கூறியதாவது:-

சென்னையில் இருந்து திருச்சி வழியாக மதுரை வரை 497 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்மயமாக்கலுடன் நடந்து வரும் இருவழிப்பாதை பணியில் இன்னும் 25 கி.மீ. நீளத்திற்கு மட்டுமே பணிகள் முடிவடையவில்லை. வருகிற டிசம்பர் மாதத்திற்குள் இந்த பணிகள் முற்றிலுமாக நிறைவடைந்து பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் திருச்சி கோட்டத்தில் உள்ள பொன்மலை ரெயில் நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் வரையிலான இருவழிப்பாதை பணியும் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை கடந்த ஆண்டை விட 1.9 சதவீதம் பேர் அதிகமாக ரெயில்களில் பயணம் செய்து உள்ளனர். வருவாயை பொறுத்தவரை கடந்த ஆண்டை விட 4.9 சதவீதம் அதிகரித்து உள்ளது. இந்தியன் ரெயில்வேயில் முதல் முறையாக ராமேஸ்வரம் முதல் மானாமதுரை வரை மனித கழிவுகளற்ற ‘கிரீன் காரிடார்’ என்கிற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில்களில் பயோ டாய்லட் வசதி பயன்படுத்தப்படுகிறது. அடுத்த கட்டமாக இதனை மதுரை முதல் விருத்தாசலம் வரையும், திருச்சி முதல் மானாமதுரை வரையும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் ரெயில்வே பாதுகாப்பு படைவீரர்கள் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினார்கள். இதனை அனைவரும் ரசித்து பார்த்தனர். பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. கூடுதல் கோட்ட மேலாளர் எச்.எம்.ஷர்மா உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story