நகை வாங்குவது போல் நடித்து தங்க கம்மல்களை திருடிய 3 பெண்கள் கைது


நகை வாங்குவது போல் நடித்து தங்க கம்மல்களை திருடிய 3 பெண்கள் கைது
x
தினத்தந்தி 25 Aug 2017 10:45 PM GMT (Updated: 2017-08-26T01:22:01+05:30)

நகை வாங்குவது போல் நடித்து தங்க கம்மல்களை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

ராயபுரம்,

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் நவரத்னம்சிங்(வயது 47). இவர், அதே பகுதியில் சேனியம்மன் கோவில் தெருவில் நகை கடை வைத்து உள்ளார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு நகை வாங்குவது போல் வந்த 3 பெண்கள், தலா 4 கிராம் எடை உள்ள 4 தங்க கம்மல்களை திருடிச்சென்று விட்டனர்.

அந்த பெண்கள் சென்ற பிறகு நகைகளை சரிபார்த்த நவரத்னம்சிங், 4 தங்க கம்மல்கள் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்த போலீசார், கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, சிப்காட், நாகலிங்கம் தெருவைச் சேர்ந்த ராமலட்சுமி(60), சுந்தரி(37), லட்சுமி(55), ஆகிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 தங்க கம்மல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான ராமலட்சுமியும், லட்சுமியும் உறவினர்கள். கணவரால் கைவிடப்பட்ட சுந்தரி, ராமலட்சுமியுடன் அவரது வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இவர்கள் 3 பேரும் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை சென்னைக்கு வந்து நகை கடையில் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

* அசோக் நகர், மேற்குமாம்பலம் மற்றும் வடபழனி பகுதிகளில் வீடுகளின் பூட்டுகளை உடைத்து தொடர்ந்து திருடி வந்த அண்ணாமலை (47) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 38 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

* சென்னையில் குண்டர் சட்டத்தில் நேற்று 10 பேரை சிறையில் அடைக்க போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

* எண்ணூரில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்றதாக குமார் (42) கைது செய்யப்பட்டார்.

* சேலையூரை அடுத்த கோவிலாஞ்சேரி அகரம்தென் சாலையில் விளம்பர பலகை கம்பி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கட்டிடத்தொழிலாளி அரவிந்தன் (20) உயிரிழந்தார்.

* அமைந்தகரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடந்த கலைநிகழ்ச்சியில் தீ வித்தை செய்து காண்பிக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.


Next Story