நீதிமன்றத்தின் மூலம் நஷ்டஈடு கேட்பதற்கு சாலை விபத்து வழக்கின் ஆவணங்களை இணையதளத்தில் பெறும் வசதி
நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர, சாலை விபத்து வழக்கின் 15 ஆவணங்களை போலீஸ் இணையதளத்தில் பெறும் வசதியை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல்,
தமிழ்நாடு போலீஸ் இணையதளம் மூலம் அனைத்து போலீஸ் நிலையங்களும் இணைக்கப்பட்டு உள்ளது. இதில் குற்ற நிகழ்வுகளில் தேடப்படும் நபர்கள், காணாமல் போனவர்கள் பற்றி அனைத்து போலீசாரும் தெரிந்து கொண்டு விசாரிக்க உதவியாக உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில், அந்த இணையதளத்தில் புகார் செய்யவும் வசதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் போலீஸ் இணையதளத்தில், பொதுமக்களுக்காக கூடுதலாக 2 வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பொதுவாக சாலை விபத்துகளில் சிக்கியவர்கள் நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வார்கள். இதற்கு முதல் தகவல் அறிக்கை, வாகன உரிமம், காயத்தின் தன்மை பற்றிய மருத்துவர் சான்று உள்ளிட்ட 15 வகையான ஆவணங்கள் தேவைப்படும். இனிமேல் அந்த ஆவணங்களை போலீஸ் இணையதளத்திலேயே பதிவிறக்கம் செய்யலாம்.
இந்த சேவை தமிழ்நாடு முழுவதும் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. இதற்காக திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மேலும் சிலருக்கு விபத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:–
சாலை விபத்தில் சிக்கியவர்கள் நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு, ஆவணங்கள் தேவைப்படும். அவற்றை பாதிக்கப்பட்ட மக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தின் மூலமாக பெற்று வந்தனர். இதில் தாமதமானால் தேவையற்ற காலவிரயம் ஏற்படும். அதை தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு போலீஸ் இணையதளத்தில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு போலீஸ் இணையதள பக்கத்தில் குடிமக்கள் பகுதிக்கு செல்ல வேண்டும். அதில் மாவட்டம், போலீஸ் நிலையம், முதல் தகவல் அறிக்கை எண், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும். பின்னர் தேவையான ஆவணங்களை குறித்து, ஒரு ஆவணத்துக்கு தலா ரூ.10 வீதம் இணையதளம் மூலமாகவே செலுத்த வேண்டும்.
பின்னர் தேவையான ஆவணங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் சம்பந்தப்பட்ட நபரின் மின்னஞ்சல் முகவரிக்கும் அவை வந்து விடும். இதனை கணினி மையத்தின் மூலம் மக்கள் பெற்றுக் கொள்ளலாம். விரைவில் அரசு பொதுசேவை மையங்களிலும் இவற்றை பெற வசதி செய்யப்பட இருக்கிறது. மேலும் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வங்கி ஏ.டி.எம். உள்ளிட்ட ஆவணங்கள் காணாமல் போனாலும் போலீஸ் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
இதன் மூலம் உடனடியாக சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் சென்று விடும். அதன்மூலம் அந்த ஆவணத்தை யாரும் பயன்படுத்த முடியாமல் முடக்கி விடுவார்கள். இந்த சேவைவை மக்கள் பயன்படுத்தி பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.