ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மதுபானபார் உரிமம் புதுப்பிக்க லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது


ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மதுபானபார் உரிமம் புதுப்பிக்க லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது
x
தினத்தந்தி 2 Sept 2017 5:00 AM IST (Updated: 2 Sept 2017 1:40 AM IST)
t-max-icont-min-icon

மதுபானபார் உரிமம் புதுப்பிக்க லஞ்சம் வாங்கிய தாசில்தார் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சிவகிரி தாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் அங்கு மாஸ்டர் கிங் என்ற பெயரில் மனமகிழ்மன்றம், மதுபான பார் ஆகியவை நடத்தி வருகிறார். இந்த மதுபான பாருக்கு உரிமம் புதுப்பிக்க ஈரோடு கோட்ட கலால் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.

விண்ணப்பத்தை பரிசீலித்து உரிமத்தை புதுப்பிக்க, கோட்ட கலால் தாசில்தார் சிவசுப்பிரமணியம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து கிருஷ்ணசாமி ஈரோடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசில் புகார் செய்தார்.

போலீசாரின் ஆலோசனையின்படி கிருஷ்ணசாமி லஞ்சமாக பணம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் நேற்றுக்காலை தாசில்தார் சிவசுப்பிரமணியத்தை தொடர்பு கொண்டு பணம் கொண்டு வருவதாக கூறினார்.

அப்போது அவர் கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் உள்ள 7–வது மாடியில் மாவட்ட உதவி கலால் ஆணையாளர் அலுவலகத்தில் இருப்பதாக தெரிவித்தார். உடனடியாக கிருஷ்ணசாமியும் அங்கு சென்றார். அவர் கையில் கொண்டு வந்த ரூ.7 ஆயிரத்தை தாசில்தார் சிவசுப்பிரமணியத்திடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து வந்து பிடித்தனர்.

அதைத்தொடர்ந்து கோட்ட கலால் தாசில்தார் சிவசுப்பிரமணியத்தை கைது செய்து ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவரிடம் இருந்து ரூ.7 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் துணை சூப்பிரண்டு புஷ்பராஜன், இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு வரை அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

இந்த சம்பவம் நேற்று ஈரோடு மாவட்ட அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story