நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு


நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு
x
தினத்தந்தி 4 Sept 2017 6:00 AM IST (Updated: 4 Sept 2017 12:30 AM IST)
t-max-icont-min-icon

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2 அடி உயர்ந்து உள்ளது. இதற்கிடையே ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்க 3–வது நாளாக தடை விதிக்கப்பட்டது.

மேட்டூர்,

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை கடந்த சில நாட்களாக தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது. இதனால் மேட்டூர் அணைக்கும் கடந்த சில நாட்களாக நீர்வரத்து தொடர்ந்து படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலையில், குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 700 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

தண்ணீர் திறப்பைவிட அணைக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று ஒரு நாளில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து உள்ளது. அதாவது, நேற்று முன்தினம் 60.48 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 62.20 அடியாக உயர்ந்தது.

அதேபோன்று அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 12 ஆயிரத்து 573 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 16 ஆயிரத்து 614 கனஅடியாக அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் பெய்வதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து இதேபோன்று நீடித்தால் இன்னும் ஒரு வாரத்தில் அணையின் நீர்மட்டம 70 அடியை தொட வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 14 ஆயிரத்து 300 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த தண்ணீர் நேற்று வினாடிக்கு 18 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்தது. இதனால் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் ஐந்தருவிகள் மற்றும் மெயின் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க நேற்று 3–வது நாளாக தடை விதிக்கப்பட்டது. ஆனால், சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தார்கள்.

தமிழகத்துக்கு வரும் தண்ணீரின் அளவை மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் பாதுகாப்பாக குளிக்குமாறு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அறிவுறுத்தி வருகிறார்கள். மேலும், போலீசார் மெயின் அருவி, நடைபாதை, முதலை பண்ணை, பரிசல்துறை உள்ளிட்ட ஆற்றங்கரையோர பகுதிகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.


Next Story