பிரசித்தி பெற்ற விநாயகர் மண்டல்களில் பக்தர்களிடம் செல்போன், பணப்பை திருடிவந்த 6 பேர் கைது
பிரசித்தி பெற்ற விநாயகர் மண்டல்களில் பக்தர்களின் செல்போன், பணப்பை திருடிவந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
பிரசித்தி பெற்ற விநாயகர் மண்டல்களில் பக்தர்களின் செல்போன், பணப்பை திருடிவந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் வாரணாசியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
செல்போன் திருட்டுவிநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு லால்பாக் ராஜா கணபதி மண்டலில் தரிசனத்திற்காக பொதுமக்கள் அதிகளவு கூடுவது வழக்கம். இந்தநிலையில் அங்கு வரும் பக்தர்களின் பணப்பை, செல்போன் போன்றவை திருட்டு போவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன. இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சப்–இன்ஸ்பெக்டர் பிரசாந்த் ஜாதவ் தலைமையில் தரிசனத்திற்காக வரும் பக்தர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இதில், 2 பேர் சந்தேகப்படும் வகையில் மண்டலில் நடமாடி கொண்டிருந்ததை பார்த்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
6 பேர் கைதுஇதில், அவர்கள் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த ரகுமான் அன்சாரி(வயது20), சேரு என்ற முகமது ஹசன் பட்டான்(25) ஆகியோர் என்பது தெரியவந்தது. பிடிபட்ட 2 பேரும் கடந்த 25–ந்தேதி தங்கள் கூட்டாளிகளுடன் மும்பை வந்துள்ளனர். பின்னர் அவர்கள் மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர் மண்டல்களில் கூட்டநெரிசலை பயன்படுத்தி செல்போன், பணப்பை திருடி வந்ததை ஒப்புக்கொண்டனர். இவர்கள் தினமும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 100 செல்போன்கள் வரை திருடி அதனை குறைந்த விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 2 பேரும் கொடுத்த தகவலின்பேரில் தாதரில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்த அவர்களது கூட்டாளிகள் நியத் கான்(27), முபாராக் அன்சாரி(26), ஹசன்(29), ஏக்ராம் அன்சாரி(20) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.