ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட தினகரன் அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்
‘ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட தினகரன் அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்’ என்று கோவை மாநகர், புறநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை,
கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவை இதய தெய்வம் மாளிகையில் நேற்றுக்காலை நடைபெற்றது. இதற்கு புறநகர் மாவட்ட அவைத்தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்து வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கிய முதல்–அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்வது.
தமிழக அமைச்சர்கள் மற்றும் கட்சி செயலாளர்களின் பதவியை பறிப்பதாக டி.டி.வி. தினகரன் அறிவிப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. தினகரன், ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர். எனவே அவர் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று இந்த கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
வருகிற 12–ந் தேதி சென்னை வானகரத்தில் நடக்க உள்ள செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த அனைவரும் கலந்து கொள்வது.
கோவை மாவட்டத்தில் இரு அணிகளாக பிரிந்திருந்த எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்பட அனைவரும் ஒரு அணியாக இணைந்து செயல்படுவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:–
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், பெருந்தன்மையோடு நடந்து கொண்டதால் தான் இரு அணிகளின் இணைப்பு சாத்தியமானது. அதைப்போல எல்லோரும் நமக்குள் விட்டுக் கொடுத்து செயல்பட வேண்டும். அப்படி விட்டு கொடுத்தால் தான்விரைவில் வர உள்ள உள்ளாட்சி தேர்தலில் அடிமட்ட தொண்டர்களும் போட்டியிட முடியும்.
நமக்கு எதிரி தி.மு.க. தான். கட்சிக்கோ, ஆட்சிக்கோ ஆபத்து வந்தால் நாம் ஒற்றுமையாக இருப்போம். வருகிற 12–ந் தேதி சென்னையில் நடைபெறும் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஏ.கே.செல்வராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன்அர்ச்சுனன், சூலூர் கனகராஜ், எட்டிமடை சண்முகம், கஸ்தூரிவாசு, அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் சின்னசாமி, முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, முன்னாள் மேயர்கள் தா.மலரவன், கணபதி ராஜ்குமார், நடிகரும், இயக்குனருமான சுந்தரராஜன், மற்றும் ஒன்றிய, பகுதி, பேரூராட்சி, நகர செயலாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த பி.ஆர்.ஜி.அருண்குமார் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு சென்றதால், அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும் போது, இரு அணிகளும் பிரிவதற்கு முன்பு யார்? யார்? ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டு பதவிகளில் இருந்தார்களோ அவர்கள் மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்பட உள்ள னர். அதன்படி கோவை மாநகர் மாவட்ட செயலாளராக பி.ஆர்.ஜி.அருண்குமார் இனிமேல் செயல்படுவார். கருத்து வேறுபாடுகளை நாம் இங்கேயே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.