கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக மாணவர்களின் போராட்டம் எதிரொலி: சிதம்பரம் மருத்துவ கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு


கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக மாணவர்களின் போராட்டம் எதிரொலி: சிதம்பரம் மருத்துவ கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Sep 2017 11:15 PM GMT (Updated: 2017-09-06T00:41:59+05:30)

கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், சிதம்பரம் மருத்துவ கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது.

சிதம்பரம்,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு மருத்துவம், பல் மருத்துவம் படிக்கும் மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவம், பல் மருத்துவத்தில் படிக்கும் மாணவர்கள் கடந்த 30–ந்தேதி முதல் கல்லூரி நுழைவு வாயில் அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து பல்கலைக்கழக நிர்வாகம், அரசு என்று யாரும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வராத நிலையில், 7–வது நாளான நேற்று மாணவர்கள் சிதம்பரம் காந்தி சிலை அருகே தங்களது பெற்றோருடன் சேர்ந்து போராட்டம் நடத்தினர். இதன் மூலம் மாணவர்களின் போராட்டம் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்தது. மேலும் தீவிரமடையும் நிலையில் இருந்து வந்தது.

இந்த நிலையில், நேற்று மாலை 4 மணிக்கு பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் இருந்து திடீரென ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் மருத்துவக்கல்லூரியில் இளநிலை பிரிவில் எம்.பி.பி.எஸ். படிக்கும்(முதலாம் ஆண்டு தவிர்த்து) மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்படுகிறது.

மேலும் கல்லூரியில் உள்ள விடுதிகளில் தங்கியுள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் உடனடியாக இன்று( அதாவது நேற்று, செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்குள் காலி செய்ய வேண்டும் என்றும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பு குறித்த நோட்டீசு அங்குள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.

இதுபற்றிய தகவல் காந்தி சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்களுக்கு தெரியவந்தது. பெரும் அதிர்ச்சி அடைந்த அவர்கள், போராட்டம் நடந்த பந்தலில் இருந்து அவசர அவசரமாக கல்லூரி விடுதிக்கு விரைந்தனர்.

அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் முறையிட்டனர். இருப்பினும் அவர்கள் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது, உடனடியாக விடுதியில் உள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு காலி செய்யுமாறு அறிவுறுத்தினர். ஆனால் மாணவர்களோ உடனடியாக காலி செய்ய சொன்னால் நாங்கள் எங்கு செல்வோம் என்று தெரிவித்து, காலி செய்ய மறுத்துவிட்டனர்.

இதையடுத்து மாணவிகள் அனைவரும் அவர்கள் தங்கியுள்ள தாமரை இல்லம் விடுதியின் முன்பும், மாணவர்கள் குமாரராஜன் முத்தையா விடுதியின் முன்பும் நின்று கொண்டிருந்தனர். இருள் சூழ்ந்த நிலையிலும் அவர்கள் எங்கும் கலைந்து செல்லாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

இது குறித்து மாணவர் ஒருவர் கூறுகையில், கல்லூரியில் மாணவர்களிடம் இருந்து அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும், கல்லூரியை அரசுடமையாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் கோரிக்கை தொடர்பாக யாரும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் திடீரென கல்லூரிக்கு விடுமுறை என்று அறிவிப்பது எந்த விதத்தில் நியாயமாகும். அதோடு, உடனடியாக இன்று 6 மணிக்குள்(அதாது நேற்று) மாணவ, மாணவிகள் விடுதியை காலி செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறபித்து இருக்கிறார்கள். இதையும் மீறி நாங்கள் விடுதியில் தங்கினால் குடிநீர், சாப்பாடு, மின்சாரம் என்று அனைத்தையும் நிறுத்தி விடுவோம் என்றும் தெரிவிக்கிறார்கள்.

இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து தங்கி படித்து வருகிறோம். நாங்கள் எங்கு செல்வோம். எனவே எங்களது கோரிக்கைகள் வெல்லும் வரையில் இங்கிருந்து கலைந்து செல்ல போவதில்லை. எங்களை அடித்து விரட்ட நினைத்தாலும் கலை போவதில்லை. கோரிக்கை வெல்லும் வரையில் எங்களது போராட்டம் தொடரும். உடனடியாக இதில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தற்போது விடுதியின் உள்ளே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை தொடர திட்டமிட்டு இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே பல்கலைக்கழக பதிவாளர்(பொறுப்பு) ஆறுமுகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த 30–ந்தேதி முதல் மருத்துவ மாணவர்கள் கல்லூரி மற்றும் மருத்துவமனை பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பல்கலைக்கழகம் அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வந்த பிறகும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான கல்வி கட்டணங்கள் மிகவும் அதிகம் என்று கூறும் மாணவர்கள் கடந்த சில நாட்களாக மக்களை திசைதிருப்பும் விதமாக மருத்துவமனை சேவையில் குறைகூறி கூட்டம் நடத்தி வருகிறார்கள்.

ராஜா முத்தையா மருத்துவகல்லூரி சுயநிதி கல்லூரி என்கிற அடிப்படையில் இயங்கி வந்தாலும், மாணவர்களின் கல்வி கட்டணம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. எனவே பல்கலைக்கழகம் இது தொடர்பாக முடிவு செய்ய இயலாது. இருப்பினும் இங்கு தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எந்த விதமான சேவை கட்டணமும் உயர்த்தப்படவில்லை. 2017–18ம் ஆண்டு மருத்துவ மற்றும் பல் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று(புதன்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது என்று அவர் கூறியுள்ளார். மருத்துவக்கல்லூரி மாணவர்களின் இந்த போராட்டத்தால் சிதம்பரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.


Next Story