தாமிரபரணியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெல்லை, தூத்துக்குடி கலெக்டர்கள் ஒத்துழைக்க வேண்டும்


தாமிரபரணியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெல்லை, தூத்துக்குடி கலெக்டர்கள் ஒத்துழைக்க வேண்டும்
x
தினத்தந்தி 5 Sep 2017 11:30 PM GMT (Updated: 5 Sep 2017 7:59 PM GMT)

தாமிரபரணியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெல்லை, தூத்துக்குடி கலெக்டர்கள் ஒத்துழைக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

மதுரை,

அகில பாரத இந்து பக்தசபையின் மாநில இளைஞரணித் தலைவர் கணேசன், மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2012–ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில், ‘தாமிரபரணி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் குவாரி உள்ளது. ஆற்றுப்படுகைகள் தனியார்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. வீடுகள், தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீரை நேரடியாக தாமிரபரணி ஆற்றில் கலக்க விடுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றக்கோரி தமிழக அரசுக்கு புகார் மனு அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது மனுவின் அடிப்படையில் தாமிரபரணியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்‘ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீபதிகள், மனுதாரர் தனது புகார் குறித்த புதிய மனுவை பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடம் அளிக்க வேண்டும். அந்த மனு மீது செயற்பொறியாளர் விரைவாக நடவடிக்கை எடுத்து தாமிரபரணியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தாமிரபரணி ஆறு 2 மாவட்டங்கள் வழியாக கடலுக்கு செல்வதால் சம்பந்தப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


Next Story