ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் நூதன முறையில் 9 பவுன் நகை திருட்டு போலீஸ் விசாரணை


ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் நூதன முறையில் 9 பவுன் நகை திருட்டு போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 6 Sep 2017 10:15 PM GMT (Updated: 2017-09-06T23:12:23+05:30)

ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் நூதன முறையில் 9 பவுன் நகை திருட்டு போலீஸ் விசாரணை

நாகர்கோவில்,

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர், தலைமை தபால்நிலைய அலுவலகம் அருகே உள்ள ஒரு வங்கிக்கு ஸ்கூட்டரில் வந்தார். அதைத்தொடர்ந்து, ஹெல்மெட்டை ஸ்கூட்டரில் வைத்துவிட்டு வங்கிக்குள் சென்ற அவர், வங்கியில் அடகு வைத்திருந்த 9 பவுன் நகைகளை மீட்டு ஒரு கைப்பையில் வைத்துக்கொண்டு வெளியே எடுத்து வந்ததாக தெரிகிறது. அப்போது, ஸ்கூட்டரில் வைத்த ஹெல்மெட் காணாமல் போயிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இதைத்தொடர்ந்து, நகைகள் அடங்கிய பேக்கை ஸ்கூட்டரில், பொருள்கள் வைக்கும் இடத்தில் வைத்து விட்டு ஹெல்மெட்டை அங்குமிங்கும் தேடிபார்த்தார்.

அந்த சமயத்தில், அங்கு வந்த வாலிபர் ஒருவர், ‘சிறுவன் ஒருவன் விளையாட்டாக ஹெல்மெட்டை எடுத்து விளையாடியதாகவும், பின்னர் அதை அருகில் உள்ள கடையின் வாசலில் வைத்து சென்றதாகவும்‘ கூறியுள்ளார். இதையடுத்து அவர், ஹெல்மெட்டை எடுக்கச்சென்றதாக தெரிகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த வாலிபர் ஸ்கூட்டரில் வைத்திருந்த 9 பவுன் தங்க நகை அடங்கிய கைப்பையை திருடிச்சென்றதாக கூறப்படுகிறது.

ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது, ஸ்கூட்டரில் வைத்திருந்த நகைப்பை திருடு போயிருந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கூச்சல்போட்டார். அவரின் சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் நடந்த விவரத்தை கேட்டறிந்தனர். பின்னர் இதுகுறித்து வடசேரி போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில், நூதன முறையில் நகைகளை திருடிசென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story