திருப்பூரில் பயங்கரம்: அரசு ஆஸ்பத்திரி செவிலியரை வெட்டிக்கொன்று நகை கொள்ளை மர்ம
திருப்பூரில் அரசு ஆஸ்பத்திரி செவிலியரை கொடூரமாக வெட்டிக்கொன்று அவர் அணிந்து இருந்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர்–அவினாசி சாலை காந்திநகர் ஏ.வி.பி.லே அவுட் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். ஆடிட்டர். இவருடைய மனைவி சாந்தி (வயது 54). இவர் அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தார். இவர்களுடைய மகள் சவுமியா. கடந்த 2 ஆண்டுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கிருஷ்ணகுமார், தனது மனைவியை விட்டு பிரிந்து கோவையில் உள்ள அவருடைய சகோதரி வீட்டில் வசித்து வருகிறார்.
சாந்தியின் வீடு தரை தளம் மற்றும் முதல் தளங்களை கொண்டதால், தரை தளத்தில் உள்ள 2 வீடுகளை வாடகைக்கு விட்டு விட்டு, சாந்தி தனது மகள் சவுமியாவுடன் முதல் தளத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சவுமியாவுக்கும், பல்லடம் கேத்தனூரை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் வேலை காரணமாக சவுமியாவும், அவருடைய கணவரும் சூலூரில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த வாரம் 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், ரமேஷ், தனது மனைவி சவுமியாவை அழைத்துக்கொண்டு பெற்றோர் வசிக்கும் கேத்தனூருக்கு சென்றார்.
இதையடுத்து சாந்தியும், கேத்தனூர் சென்று சம்பந்தி வீட்டில் தங்கினார். பின்னர் நேற்று முன்தினம் சாந்தி கேத்தனூரில் இருந்து அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்றார். அங்கு வேலை முடிந்ததும் மதியம் 2 மணிக்கு ஆஸ்பத்திரியில் இருந்து புறப்பட்டு காந்தி நகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சவுமியா தனது தாய் சாந்தியின் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் செல்போனை எடுத்து சாந்தி பேசவில்லை.
பின்னர் நேற்று காலை மீண்டும் சவுமியா, தனது தாய் சாந்திக்கு செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றும் செல்போனை சாந்தி எடுக்கவில்லை. இதனால் சவுமியா, தங்களது தரைதள வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் கிரிஜா என்பவரை தொடர்பு கொண்டு, மாடிக்கு சென்று, தனது தாயாரை பார்க்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து கிரிஜா, மாடிக்கு சென்றார். அப்போது சாந்தியின் வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. ஆனாலும் சந்தேகத்தின் பேரில், ஜன்னல் கதவை அங்கும், இங்கும் அசைத்து ‘‘ சாந்தி, சாந்தி’’ என்று பெயர் சொல்லி அவர் அழைத்தார். ஆனாலும் வீட்டில் இருந்து சத்தம் எதும் வரவில்லை. இதையடுத்து ஜன்னலை திறந்து பார்த்தபோது வீட்டினுள் சாந்தி, ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதை பார்த்ததும் கிரிஜா அதிர்ச்சியில் அலறினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சாந்தியின் மகள் சவுமியாவுக்கும், அனுப்பர்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் பிரபாகரன், கயல்விழி, உதவி கமிஷனர்கள் அண்ணாத்துரை, அனுப்பர்பாளையம் இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து சென்றனர். அப்போது வீட்டின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால், பூட்டை உடைத்து போலீசார் உள்ளே சென்றனர். அப்போது சாந்தியின் உடல் அருகே பெரிய அரிவாள் கிடந்தது. ரத்தம் சிதறி கிடந்தது. சாந்தி பின்புற தலையில் அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் அணிந்து இருந்த 8 பவுன் மதிப்புள்ள, 2 தங்க சங்கிலிகளையும் காணவில்லை.
சாந்தியை கொலை செய்த ஆசாமிகள், அவர் அணிந்து இருந்த தங்க சங்கிலிகளையும் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கைரேகை மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களையும், கைரேகைகளையும் சேகரித்தனர். பின்னர் போலீஸ் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. இந்த மோப்பநாய், சாந்தியின் உடல் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. இதற்கிடையில் சவுமியாவும் விரைந்து வந்து, தனது தாய் சாந்தியின் உடலை பார்த்து கதறி அழுதார்.
அதன்பின்னர் சாந்தியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நகைக்காக இந்த கொலை நடந்துள்ளதா? அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் சாந்தி வீட்டின் அருகே உள்ள வீடுகளில் பொருத்தி இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை வைத்தும் போலீசார் கொலையாளிகளை தேடி வருகிறார்கள். வீட்டில் தனியாக இருந்த மருத்துவ மனை செவிலியர் கண்காணிப்பாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாந்திக்கும், பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வக தொழில்நுட்ப ஊழியராக வேலைபார்க்கும் அவினாசியை சேர்ந்த ஒருவருக்கும் நட்பு ரீதியாக பழக்கம் இருந்துள்ளது. அதன் அடிப்படையில் அவர் சாந்தியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் திடீரென்று அவரை போலீசார் பிடித்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் சாந்தியும், கிருஷ்ணகுமாரும் சேர்ந்து வாழும்போதே அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது கிருஷ்ணகுமார், சாந்தியை கொலை செய்து விடுவேன் என்று கூறி தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சாந்தியின் கொலையில் அவருடைய கணவர் கிருஷ்ணகுமாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சாந்தியின் வீட்டின் கீழ் தளத்தில் வாடகைக்கு குடியிருக்கும் கிரிஜா, நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு சாந்தியிடம் வீட்டு வாடகை கொடுத்துள்ளார். அதன்பின்னர் இரவு 7.12 மணிக்கு சாந்தி, தனது உறவினரான பெண் ஒருவருக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அதன்பின்னர் தான் சாந்தியின் மகள் சவுமியா, சாந்தியை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் செல்போனை எடுக்கவில்லை. மேலும் இரவு 8 மணிக்கு சாந்தியின் வீட்டில் இருந்து டமால், டமால் என்று சத்தம் வந்ததாக கீழ் தளத்தில் குடியிருந்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். எனவே சாந்திக்கும், கொலையாளிகளுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கொலை நடந்து இருக்கலாம் என்றும், அதை தொடர்ந்து கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு கொலையாளிகள் சென்று இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.