உடலை சூட்கேசில் வைத்து வீசிய கொடூரம் இளம்பெண் கற்பழித்துக் கொலை
இளம்பெண்ணை கற்பழித்துக் கொன்றுவிட்டு உடலை சூட்கேசில் வைத்து வீசிய காதலன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
இந்த கொடூர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
நாக்பூரை சேர்ந்தவர் அங்கிதா(வயது 22). இவர் மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரும் நாக்பூரை சேர்ந்த அமித் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி ஜோடியாக பல பகுதிகளில் சுற்றித்திரிந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 3–ந்தேதி, அங்கிதாவை அம்பர்னாத் பகுதிக்கு வருமாறு அமித் அழைத்துள்ளார். அதன்பேரில் அங்கிதாவும் அங்கு சென்றுள்ளார்.அப்போது அங்கு அமித் தனது நண்பர் ஒருவருடன் இருந்தார். அந்த சமயத்தில், அமித் தனது நண்பருடன் சேர்ந்து வலுகட்டாயமாக அங்கிதாவை கற்பழித்ததாக தெரிகிறது. பின்னர், இதுபற்றி அங்கிதா வெளியே சொல்லிவிடுவார் என்று பயந்த அவர்கள் 2 பேரும், அங்கிதாவை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
பின்னர் அங்கிதாவின் உடலை ஒரு சூட்கேசில் வைத்து அடைத்துள்ளனர். அங்கிதா உடல் உள்ள சூட்கேசை யாருக்கும் சந்தேகம் வராத ஒரு இடத்தில் வீச முடிவு செய்தனர். அதன்படி அமித், தனது நண்பர் கிரிஷ் என்பவருக்கு போன் செய்து, ‘அவசர வேலையாக பெலகாவிக்கு செல்ல வேண்டி உள்ளது. உன்னுடைய காரை எடுத்துக் கொண்டு வா‘ என்று கூறினார். இதையடுத்து கிரிசும் காரை எடுத்துக்கொண்டு அங்கு சென்றார். அவர்கள், அங்கிதாவை கற்பழித்து கொலை செய்ததை கிரிசிடம் கூறாமல் மறைத்துவிட்டனர்.பின்னர், அந்த சூட்கேசை அவருடைய காரில் வைத்து பெலகாவிக்கு சென்றனர். அப்போது அவர்கள், பெலகாவி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பாலத்தின் பகுதியில் வந்தபோது, காரை நிறுத்தினர். பின்னர் அமித், அங்கிதாவை கொன்று உடலை வைத்திருந்த சூட்கேசை காரில் இருந்து எடுத்து பாலத்திற்கு அடியில் வீசினார். இதனை பார்த்து கிரிஷ் சந்தேகமடைந்தார்.
இதுகுறித்து அவர், ரத்னகிரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அந்த சூட்கேசை மீட்டு சோதனை செய்தனர். அப்போது, அந்த சூட்கேசில் ஒரு பெண்ணின் உடல் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசார், அமித், கிரிஷ் உள்பட 3 பேரிடம் விசாரித்தனர்.விசாரணையில், அமித்தும், அவருடைய நண்பரும் சேர்ந்து அந்த பெண்ணை கற்பழித்து கொலை செய்து உடலை சூட்கேசில் வைத்து அதனை பெலகாவியில் பாலத்துக்கு அடியில் வீசியதும், அந்த பெண் அமித்தின் காதலி அங்கிதா என்பதும் தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் கிரிசுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த சூட்கேசில் இருந்த உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக ரத்னகிரி போலீசார் காகாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து காகாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அமித் மற்றும் அவருடைய நண்பரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவம் குறித்து அங்கிதாவின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து அங்கிதாவின் உடலை அடையாளம் காட்டிய பிறகு, போலீசார் அடுத்த விசாரணையை தொடங்குவார்கள் என்று கூறப்படுகிறது.