வேலூரில் 2–வது நாளாக நடந்தது கோர்ட்டு தடை உத்தரவை மீறி மறியல் போராட்டம்


வேலூரில் 2–வது நாளாக நடந்தது கோர்ட்டு தடை உத்தரவை மீறி மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 9 Sept 2017 4:45 AM IST (Updated: 9 Sept 2017 1:11 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோர்ட்டு தடை உத்தரவை மீறி மறியலில் ஈடுபட்டனர். போலீசார் கைது செய்யாததால் அவர்களாகவே கலைந்து சென்றனர்.

வேலூர்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு ஐகோர்ட்டு மதுரை கிளை தடை விதித்துள்ளது.

கோர்ட்டு தடை உத்தரவையும் மீறி நேற்று 2–வது நாளாக போராட்டம் நடந்தது. வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று காலை முதலே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திரண்டனர். 12 மணியளவில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனால் போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் முன்பு இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்ற அவர்கள் சென்னை– பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்துக்கு அடியில் உள்ள சர்வீஸ் ரோட்டின் இருபுறங்களிலும் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சர்வீஸ் ரோட்டில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை மார்க்கமாக சென்ற வாகனங்களும், ஆற்காடு மார்க்கத்தில் இருந்து வேலூர் நோக்கி வந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை.

இதனால் போராட்டத்தை கைவிடும்படி மறியல் செய்தவர்களுடன், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியலை கைவிடவில்லை. ஆனாலும் அவர்களை போலீசார் கைது செய்யவில்லை. இதனால் அவர்களாகவே மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story