கள்ளத்தொடர்பை கணவர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய பெண், தூக்கில் பிணமாக தொங்கினார் கொலையா? போலீஸ் விசாரணை

கள்ளத்தொடர்பை கணவர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய பெண், மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
அரசூர்,
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சித்தானங்கூர் ஏரியில் உள்ள ஒரு மரத்தில் பெண் ஒருவர், தூக்கில் தொங்கியவாறு அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து உடனே திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் சித்தானங்கூர் பழைய காலனியை சேர்ந்த வீரப்பன் மனைவி அன்னப்பூ (வயது 35) என்பதும், கடந்த மாதம் 18–ந் தேதி இவருக்கும், அவரது கணவர் வீரப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும், அதன் பிறகு வீட்டை விட்டு அன்னப்பூ வெளியேறியதும் தெரியவந்தது. தொடர்ந்து, அன்னப்பூவின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசில் வீரப்பன் புகார் செய்தார். அந்த புகாரில், தனது மனைவி அன்னப்பூவிற்கும், அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததும், இதை நான் கண்டித்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
மேலும் சம்பவத்தன்று ரேஷன் கடைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிச்சென்ற அவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் தற்போது சித்தானங்கூர் ஏரியில் அன்னப்பூ தூக்கில் தொங்கியபடி மர்மமான முறையில் பிணமாக கிடந்துள்ளார். எனவே அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அந்த புகாரில் கூறியிருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்னப்பூ கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனவேதனை அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் அடித்துக்கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்க விட்டு சென்றனரா? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.