தூத்துக்குடியில் 14 பெண்களிடம் நகை பறிப்பு: ஆந்திராவை சேர்ந்த 3 பெண்களிடம் போலீஸ் தீவிர விசாரணை
தூத்துக்குடியில் 14 பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து ஆந்திராவை சேர்ந்த 3 பெண்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் 14 பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து ஆந்திராவை சேர்ந்த 3 பெண்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
58 பவுன் தங்கச்சங்கிலிகள்தூத்துக்குடி சிவன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் காலையில் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம கும்பல் ஒன்று பெண்களிடம் தங்கச்சங்கிலிகளை பறித்து சென்றது.
இந்த சம்பவத்தில் 14 பெண்களிடம் சுமார் 58 பவுன் தங்கச்சங்கிலிகள் பறிக்கப்பட்டதாக தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
விசாரணைஇதுகுறித்து பக்தர்கள் கூட்டத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பெண்களை பிடித்து மத்தியபாகம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஆந்திரா மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்த அபி, சுகந்தி, சுஜி என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் சுஜி என்பவரிடம் இருந்து செல்போன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், அந்த செல்போன் எண்ணில் கடந்த 2 நாட்களில் பேசியவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சங்கிலி பறிப்பு சம்பவத்தில் 7–க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.