வச்சக்காரப்பட்டி பஞ்சாயத்தில் மின் நிலையம் அமைத்துள்ள நிறுவனம் நீர்நிலைகளை சீரமைக்க வேண்டும்


வச்சக்காரப்பட்டி பஞ்சாயத்தில் மின் நிலையம் அமைத்துள்ள நிறுவனம் நீர்நிலைகளை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 10 Sept 2017 4:30 AM IST (Updated: 10 Sept 2017 1:07 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே உள்ள வச்சக்காரப்பட்டி பஞ்சாயத்தில் மின்நிலையம் அமைத்துள்ள நிறுவனம் சுற்றியுள்ள நீர்நிலைகளை சீரமைக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை 

விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர்.நகரை சேர்ந்தவர் செந்தில்விநாயகம். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:–

விருதுநகர் அருகே உள்ள வச்சக்காரப்பட்டி பஞ்சாயத்தில் தனியார் நிறுவனம் மின் உற்பத்தி நிலையம் அமைத்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அமைச்சகம், மின் உற்பத்தி நிலையம் அமைத்துள்ள நிறுவனங்கள் அதனை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள நீர்நிலைகளை சீரமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது பற்றி விருதுநகர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தேன். அதன் அடிப்படையில் கலெக்டர் விருதுநகர் தாசில்தாரை குறிப்பிட்ட பகுதியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அதன்பேரில் விருதுநகர் தாசில்தார் வச்சக்காரப்பட்டி கிராமத்தில் மின் உற்பத்தி நிலையத்தை சுற்றியுள்ள பறையன்ஊருணி, பிச்சாண்டி ஊருணி, அய்யன்ஊருணி, பொட்டல் ஊருணி, அய்யனார்கோவில் ஊருணி, மாட்டு ஊருணி, வான்ஊருணி, வச்சக்காரப்பட்டி கண்மாய், பூசாரிப்பட்டி கண்மாய், கவுசிகாநதி ஆகிய நீர்நிலைகளை தூர்வாரி, சீமைக்கருவேல மரங்களை அகற்றி சீரமைக்க வேண்டும் என அந்த நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார். அதன்படி மேற்கண்ட நீர்நிலைகளை சீரமைக்க உத்தரவிட வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் வச்சக்காரப்பட்டி பஞ்சாயத்தில் மின் உற்பத்தி நிலையம் அமைத்துள்ள நிறுவனம் அந்த பஞ்சாயத்தில் விருதுநகர் தாசில்தார் குறிப்பிட்டுள்ள நீர்நிலைகளை இந்த தீர்ப்பு நகல் கிடைத்த 6 மாதத்துக்குள் சீரமைக்க வேண்டும் என்றும், அதற்கு விருதுநகர் தாசில்தார் தேவையான ஒத்துழைப்பும், உதவியும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.


Next Story