மேகமலை மலைச்சாலையில் பரப்பப்பட்டுள்ள ஜல்லிக்கற்களால் பழுதடையும் சுற்றுலா வாகனங்கள் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
மேகமலை மலைச்சாலையில் பரப்பி வைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கற்களால் சுற்றுலா வாகனங்கள் அடிக்கடி பழுதடைகின்றன. எனவே சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்னமனூர்,
சின்னமனூரில் இருந்து 56 கிலோ மீட்டர் தூரத்தில் மேகமலை வன உயிரிகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு மேகமலை, ஹவேவிஸ், மணலாறு, இரவங்கலாறு உள்பட 7 மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் பசுமை நிறைந்து காணப்படும் தேயிலை தோட்டங்களின் அழகை ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதன் மூலம் ஊட்டி, கொடைக்கானல் போல் மேகமலையும் சிறந்த சுற்றுலா தலமாக மாறி வருகிறது.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மேகமலையில் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் முறையாக கிடைக்கவில்லை என்ற புகார் பரவலாக உள்ளது. மேலும் சின்னமனூரில் இருந்து மேகமலை செல்லும் மலைச்சாலையும் போதிய பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது.
இது குறித்து அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக சாலையை சமன்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. இதற்காக ஜல்லிக்கற்கள் கொண்டுவரப்பட்டு சாலை அமைக்கும் எந்திரங்கள் மூலம் சாலையில் பரப்பும் பணி நடந்தது.
இந்த பணி முடிவடைந்து 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை தார்சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் பஸ், கார்கள் அடிக்கடி பழுதாகி பாதி வழியில் நிற்கின்றன. வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், சாலையில் பரப்பப்பட்டுள்ள ஜல்லிக்கற்கள் வேகமாக செல்லும் வாகனங்களின் என்ஜின் பகுதியை சேதப்படுத்திவிடுகின்றன. இதனாலேயே மலைச்சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதடைகின்றன. இதே போல் இருசக்கர வாகனங்களில் இந்த சாலையில் செல்பவர்களும் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே தார்சாலை அமைக்கும் பணியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.