நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
x
தினத்தந்தி 9 Sep 2017 11:15 PM GMT (Updated: 9 Sep 2017 7:41 PM GMT)

‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,

திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 6–ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வியில் சுமார் 7 ஆயிரம் மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த ஆண்டு முதல் முறையாக பிளஸ்–1 மாணவர்களும், வழக்கம் போல எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 மாணவர்களும் பொதுத்தேர்வை எழுத உள்ளதால் அவர்களுக்கு பள்ளி வேலை நாட்களில் தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், சனிக்கிழமையும் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

அது போல் நேற்று இந்த 3 வகுப்புகளை சேர்ந்த மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். அதில் 100–க்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளிக்குள் செல்லாமல் நுழைவு வாயிலுக்கு வெளியே நின்று கொண்டனர். பின்னர் அவர்கள் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும். அரியலூர் மாணவி அனிதாவின் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். அப்போது அங்கு வந்த பள்ளி ஆசிரியர் தங்ககனி மாணவிகளை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறி மாணவிகள் ஆவேசமாக கூச்சலிட்டனர். இது பற்றி மாணவிகள் தங்களின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த மாவட்ட போலீஸ் துணை கமி‌ஷனர் கயல்விழி, மகளிர் போலீசார் மற்றும் திருப்பூர் வடக்கு போலீசார் மாணவிகளை நுழைவு வாயிலுக்கு உள்ளே செல்ல வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து உள்ளே சென்ற மாணவிகள் தரையில் அமர்ந்து ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி கோ‌ஷமிட்டனர். துணை கமி‌ஷனர் கயல்விழி மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவிகள், எங்களை தகாத வார்த்தைகளால் பேசிய ஆசிரியர் மன்னிப்பு கேட்டால்தான் போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர். பெற்றோரும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அந்த ஆசிரியர் மாணவிகளிடம் மன்னிப்பு கேட்டார்.

மாணவிகள் அந்த பிரச்சினையை அத்துடன் விட்டு விட்டு வகுப்பறைக்குள் இருக்கும் மற்ற அனைத்து மாணவிகளையும் வெளியில் அனுப்ப வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். பள்ளி தலைமையாசிரியை சரஸ்வதி மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த போது அவரை பேச விடாமல் மாணவிகள் சத்தம்போட்டதால் அவர் திரும்பி சென்று விட்டார். மேலும் வகுப்பறைக்குள் இருந்த மாணவிகளையும் வெளியில் அனுப்ப மறுத்துவிட்டார். இந்த நிலையில் வகுப்பறைகளை விட்டு வெளியே வந்த மாணவிகளை மற்ற மாணவிகள் கைகோர்த்து நின்று வெளியில் விடாமல் தடுத்தனர்.

இதனிடையே இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த சிலர் பள்ளி வளாகத்தில் நின்று கொண்டு மாணவிகளை போராட தூண்டிவிடுவதாக கூறி போலீசார் அவர்களை வெளியே செல்லும் படி கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர்கள் வெளியில் செல்ல மறுத்ததால் தலைமையாசிரியை வந்து பேசினார். அப்போதும் அவர்கள் செல்ல மறுத்ததால் தலைமையாசிரியை போலீசாரிடம் புகார் கடிதம் கொடுத்தார். இதையடுத்து அவர்களை போலீசார் அங்கிருந்து வெளியேற்றினார்கள்.

பின்னர் மாணவிகளிடம் பேசிய போலீசார் முன் கூட்டியே அனுமதி பெறாமல் இது போன்ற போராட்டங்கள் நடத்தக்கூடாது என்றனர். எனவே முறையாக அனுமதி பெற்று வருகிற 23–ந்தேதி போராட்டத்தை நடத்திக்கொள்ளுங்கள் என்றனர். ஆனால் அதற்கு ஒத்துக்கொள்ளாத மாணவிகள் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு தலைமையாசிரியைக்கு ஒரு மனு எழுதி அதில் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவிகள் கையெழுத்து போட்டு கொடுத்தனர். பின்னர் மீண்டும் தரையில் அமர்ந்து கோ‌ஷமிட்டுக்கொண்டே இருந்தனர்.

இந்த நிலையில் பள்ளிக்கு வந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து மாணவிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் காலை 9.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் மதியம் 1 மணிக்கு முடிவுக்கு வந்தது.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி கூறும் போது, வெளியாட்களின் தூண்டுதல் காரணமாகவே மாணவிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் நான் விளக்கி பேசியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர் என்றார்.


Next Story