ஊட்டியில் இருந்து நாகர்கோவில் வந்த அரசு பஸ்சில், புதுப்பெண் திராவகம் குடித்து தற்கொலை


ஊட்டியில் இருந்து நாகர்கோவில் வந்த அரசு பஸ்சில், புதுப்பெண் திராவகம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 10 Sep 2017 11:15 PM GMT (Updated: 10 Sep 2017 6:24 PM GMT)

ஊட்டியில் இருந்து நாகர்கோவில் வந்த அரசு பஸ்சில், புதுப்பெண் ஒருவர் திராவகம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து குமரி மாவட்டம் மார்த்தாண்டத்துக்கு நேற்றுமுன்தினம் மாலை அரசு விரைவு போக்குவரத்து கழக சொகுசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பஸ் கோவையை வந்தடைந்தததும், பஸ்சில் காலியாக இருந்த சீட்களுக்கு பயணிகளை ஏற்றும்பொருட்டு அங்கு சிறிதுநேரம் நிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இரவு 7 அளவில் கோவையில் இருந்து புறப்பட்ட அந்த பஸ் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் நாகர்கோவில் வடசேரி பஸ்நிலையத்துக்கு வந்து சேர்ந்தது.

அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் ஒவ்வொருவராய் கீழே இறங்கினர். ஒரு இளம்பெண் மட்டும் சீட்டில் சாய்ந்தநிலையில், முகத்தை துப்பட்டாவால் மூடிய நிலையில் இருந்தார். இதைக்கவனித்த பஸ்கண்டக்டர், சத்தம் கொடுத்து அவரை எழுப்ப முயற்சித்தார். ஆனால் அந்த இளம்பெண் எவ்வித அசைவும் இன்றி இருந்ததால் சந்தேகமடைந்த கண்டக்டர், அவரை எழுப்ப முயற்சித்தார். அப்போது, இளம்பெண்ணின் முகத்தில் இருந்த துப்பட்டா விலகியது. மேலும் அந்த இளம்பெண் மூக்கில் இருந்து நுரைதள்ளிய நிலையில் இறந்து இருந்தார். இதைப்பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து உடனே அவர் வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவஇடத்துக்கு விரைந்துவந்த போலீசார், இளம்பெண் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பாசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இளம்பெண்ணின் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் இருந்த வாக்காளர் அடையாள அட்டை, ஊழியர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர். அதிலிருந்து, அவர் கோவை மாவட்டம், மதுக்கரை அருகே உள்ள செட்டியார்தோட்டம் பகுதியை சேர்ந்த முத்துச்செல்வி (வயது 22) என்பதும், கோவையில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன், உறவினர் திருமணத்துக்கு செல்வதற்காக விடுமுறை எடுத்திருந்த முத்துச்செல்வி, திருமணத்துக்கு பின்னர் கூடுதலாக இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்ததாக தெரிகிறது. அதன்காரணமாக, அவர் வேலைபார்த்த நகைக்கடை நிறுவனத்தினர் முத்துசெல்வியை வேறொரு பிரிவுக்கு மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நிறுவனத்தினரை, அவர் சமரசம் செய்ய முயற்சித்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் நேற்றுமுன்தினம் இரவு, நகைகளில் உள்ள அழுக்கை எடுக்க பயன்படும் திராவகத்தை குடித்துவிட்டு நாகர்கோவில் வரும் பஸ்சில் ஏறி அமர்ந்துகொண்டதாக தெரியவந்தது.

முத்துச்செல்வி இறந்தது பற்றிய தகவல் அவரின் உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. உறவினர்கள் வந்த பின்னரே, முத்துச்செல்வி எதற்காக தற்கொலை செய்துகொண்டார்?, ஏன் நாகர்கோவில் வரும் பஸ்சில் ஏறினார்?, குடும்ப தகராறு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது பற்றிய தெளிவான காரணங்கள் கிடைக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

முத்துச்செல்வி புதுப்பெண் ஆவார். அவருக்கு 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அவருடைய கணவர் பெயர் முருகன். எனவே, முத்துச்செல்வியின் தற்கொலைகுறித்து அவருடைய கணவர் முருகனிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

நாகர்கோவில் வந்த அரசு பஸ்சில் புதுப்பெண் ஒருவர் திராவகம் குடித்து தற்கொலை கொண்ட சம்பவம் நேற்று பஸ்நிலைய பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story