ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு 10–வது நாளாக பரிசல் இயக்க தடை


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு 10–வது நாளாக பரிசல் இயக்க தடை
x
தினத்தந்தி 10 Sep 2017 11:00 PM GMT (Updated: 2017-09-11T00:53:49+05:30)

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் பரிசல் இயக்க 10–வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பென்னாகரம்,

கர்நாடகா மற்றும் தமிழகத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. இதனால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 13,700 கனஅடி தண்ணீர் வந்தது.

இந்தநிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மதியம் 1 மணியில் இருந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. மாலை 5 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 14,500 கனஅடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்து இரவு 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

இதனால் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டியது. இரவு நடைபாதையை தொட்டவாறு தண்ணீர் சென்றது. இதனால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததையடுத்து அதிகாரிகள் ஒகேனக்கல்லுக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.

மேலும் போலீசார், ஊர்காவல் படையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கர்நாடக–தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை அளந்து கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நேற்று 10–வது நாளாக நீடித்தது.


Next Story