பொன்னேரி அருகே ரெயில் முன் பாய்ந்து வியாபாரி தற்கொலை, உறவினர்கள் மறியல்


பொன்னேரி அருகே ரெயில் முன் பாய்ந்து வியாபாரி தற்கொலை, உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 10 Sep 2017 11:00 PM GMT (Updated: 10 Sep 2017 7:45 PM GMT)

பொன்னேரி அருகே ரெயில் முன் பாய்ந்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி,

பொன்னேரியை அடுத்த புலிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 18). பால் வியாபாரி. நேற்று முன்தினம் அருகில் உள்ள ஆத்திரேயமங்கலம் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த பகுதியில் இருந்த ஜோதி, சுப்பிரமணி, ஆகியோர் நவீன்குமாரை தாக்கியதாக தெரிகிறது. இதனால் மனவருத்தம் அடைந்த நவீன்குமார் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் நவீன்குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உடலை பெற்று கொண்ட உறவினர்கள் நவீன்குமாரின் தற்கொலைக்கு காரணமான ஜோதி, சுப்பிரமணி ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று கூறி பொன்னேரி–திருவொற்றியூர் நெடுஞ்சாலை புலிக்குளம் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்வதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story