மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: சாயப்பட்டறை நிறுவனங்களில் நிலக்கரியை எரிக்க தடை விதிக்கக்கோரி மனு
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் கரைப்புதூர் பகுதியில் சாயப்பட்டறை நிறுவனங்களில் நிலக்கரியை எரிக்க தடை விதிக்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர்.
பல்லடம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–
பல்லடம் அண்ணாநகர் குட்டை கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அந்த குட்டையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த குட்டையை தூர்வார பொதுமக்களாகிய நாங்கள் முடிவு செய்துள்ளோம். எனவே மாவட்ட கலெக்டர் இதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தியாகி குமரன் பொது தொழிலாளர் சங்கத்தினர் அளித்த மனுவில் ‘‘பல்லடம் அறிவொளிநகர் பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளது. நெருக்கடியான நிலையில் உள்ள இந்த கட்டிடத்திற்கு 150–க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கிறார்கள். எனவே இங்கு புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு நில அளவை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளவும், காலதாமதமின்றி குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.
பல்லடம் கரைப்புதூர் ஊராட்சி குன்னங்கல்பாளையம் சிவன்மலை ஆண்டவர்நகர் பகுதி பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் ‘‘எங்கள் பகுதியில் 400–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. எங்கள் கிராமங்களை சுற்றி இயங்கி வரும் சாயப்பட்டறைகளில் பாய்லர் பயன்படுத்தப்படுகின்றன. அந்த பாய்லரை உபயோகிப்பதற்காக நிலக்கரியை எரிக்கின்றனர். அப்போது வரும் புகையை முறைப்படி வெளியேற்றுவதில்லை. இதனால் காற்று மாசுபடுகிறது. அத்துடன் பொதுமக்களுக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் மக்கள் சுவாசிக்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த நிறுவனங்களில் நிலக்கரி பயன்படுத்துவதை தடை விதிக்க வேண்டும். பாய்லர் எரியூட்டுவதற்காக மரக்கட்டைகளை பயன்படுத்த ஆணையிட வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது.
இதுபோல் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டம் மங்கலம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் ‘‘ஆண்டிபாளையம் குளம் 56 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் வந்த தண்ணீரால் இந்த குளம் நிறைந்தது. ஆனால் தண்ணீர் வெளியேறும் வாய்க்கால் செப்பனிடப்படாமல் உள்ளது. குளம் நிரம்பி தண்ணீர் வெளியே செல்லும் போது விவசாய நிலங்களையும், குடியிருப்புகளையும் சேதப்படுத்தி விடும். எனவே இந்த வாய்க்காலை கடைசி வரை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.