சோழிங்கநல்லூரில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்– உள்ளிருப்பு போராட்டம்


சோழிங்கநல்லூரில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்– உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 12 Sept 2017 5:30 AM IST (Updated: 12 Sept 2017 3:41 AM IST)
t-max-icont-min-icon

சோழிங்கநல்லூரில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சோழிங்கநல்லூர்,

மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டும், ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய–மாநில அரசுகளை கண்டித்தும் சோழிங்கநல்லூரில் உள்ள முகமது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் நேற்று அனிதாவின் புகைப்படம் ஒட்டிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சோழிங்கநல்லூர்–மேடவாக்கம் சாலையில் கோ‌ஷங்கள் எழுப்பியபடி பேரணியாக வந்தனர்.

பின்னர் அவர்கள், திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த துரைப்பாக்கம் போலீஸ் உதவி கமி‌ஷனர் அய்யப்பன் மற்றும் செம்மஞ்சேரி போலீசார், மறியலில் ஈடுபட்ட மாணவர்களை சமரசம் செய்து வைத்தனர்.

இதையடுத்து சாலை மறியலை கைவிட்ட மாணவர்கள், கல்லூரியின் வெளிப்புற கேட் பூட்டப்பட்டு இருந்ததால் கல்லூரிக்கு வெளியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரிக்கு உள்ளே இருந்த சகமாணவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பூட்டை உடைத்து வெளியே வர முயன்றனர்.

இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் கல்லூரி கேட் திறக்கப்பட்டது. இதையடுத்து வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் கல்லூரிக்குள் சென்று கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு பேராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

திருப்போரூர் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து திருப்போரூர் பஸ் நிலையம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும், மத்திய–மாநில அரசுகளை கண்டித்தும் கோ‌ஷமிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருப்போரூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர்.


Next Story