திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.13¼ லட்சம் தங்கம் பறிமுதல்
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.13¼ லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
செம்பட்டு,
மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் மாலை திருச்சிக்கு ஒரு தனியார் விமானம் வந்தது. அந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை சுங்க இலாகாவின் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திருச்சியை சேர்ந்த முகம்மது அனீஸ், நாகூர் மீரா, இளையாங்குடியை சேர்ந்த முகம்மது நாகூர் அனிபா ஆகியோர் 338 கிராம் தங்கத்தை காலணியிலும், மீன் டின்களிலும் மறைத்து எடுத்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சத்து 22 ஆயிரம் ஆகும்.
இதேபோல் நேற்று முன்தினம் இரவு 8.55 மணிக்கு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த மற்றொரு தனியார் விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த ரியாஸ்கான் என்பவர் ரூ.3 லட்சத்து 3 ஆயிரம் மதிப்புள்ள 99 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.