கோவையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1½ கோடி மோசடி செய்த 3 பேர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1½ கோடி மோசடி செய்த 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து சொகுசு கார்கள், மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை,
கோவை ஈச்சனாரி, ஒண்டிபுதூர், போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சில நாட்களுக்கு முன்பு டிப்– டாப் ஆசாமிகள் சிலர் சென்றுள்ளனர். அவர்கள் அந்த பகுதி பொதுமக்களிடம் தங்களுக்கு அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகளை தெரியும் என்று கூறிஉள்ளனர்.
மேலும், மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அலுவலகம் மற்றும் கோவை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தங்களுக்கு தெரியும் என்றும், இவர்கள் மூலம் மத்திய அரசு அலுவலகங்களில் வேலை வாங்கித்தருவதாக கூறினர். கோவை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றுபவர் மூலம், குடிசைமாற்று வாரியத்தினால் கட்டப்பட்டுள்ள வீடுகளை குடியிருக்க ஒதுக்கீடு பெற்றுத்தருவதாகவும் கூறியுள்ளனர். மேலும், அரசு உயர் அதிகாரி என்று கூறி ஒருவரையும் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.
இதனை உண்மை என்று நம்பிய பொதுமக்கள், மத்திய அரசு அலுவலகங்களில் வேலை பெறுவதற்காக ரூ.5 லட்சம் வரையும், குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் இலவச வீடு ஒதுக்கீடு கிடைக்க ரூ.50 ஆயிரம் வரையும் அந்த நபர்களிடம் கொடுத்தனர். மேலும், வேலைக்கான ஆணைகள், வீடு ஒதுக்கீட்டுக்கான ஆணைகளையும் அந்த நபர்கள் வழங்கினர். இதனை சம்பந்தப்பட்ட
அலுவலகங்களுக்கு கொண்டு சென்றபோதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டு இருப்பதை பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அறிந்தனர். 100–க்கும் மேற்பட்டவர்களிடம் மொத்தம் ரூ.1½ கோடி வசூலித்துவிட்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.
இந்த மோசடி தொடர்பாக கோவை நகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்தனர். கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ஆசை தம்பி, இன்ஸ்பெக்டர் கலையரசி மற்றும் சப்–இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மோசடி கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டவர் கோவை ரெயில் நிலையம் அருகே வந்தபோது, பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அவரை பார்த்து மடக்கிப்பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களின் பிடியில் இருந்து அவர் தப்பி ஓடிவிட்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மோசடி கும்பலை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.
கைதானவர்கள் விவரம் வருமாறு:–
1.சங்கர்ராஜா(வயது35), பராசக்தி நகர், ஈச்சனாரி, கோவை.
2. மகபூப் அலி(39), கே.வி.கே. நகர், மதுக்கரை மெயின்ரோடு, கோவை.
3. சுதாகர்(37), காமராஜர் நகர், சிட்கோ, கோவை.
மோசடிக்கு சங்கர் ராஜா தலைவனாக செயல்பட்டுள்ளார். கோவை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் என்று அவர் பலரிடம் கூறி வந்துள்ளார். அதிகாரியின் பெயரும், இவரது பெயரும் ஒன்றுபோல் இருந்ததால் பலர் இதனை நம்பி பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். மகபூப் அலியும், சுதாகரும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
கோவை ஈச்சனாரியில் உள்ள சங்கர் ராஜாவின் வீட்டில் சோதனை நடத்தி ஏராளமான போலி முத்திரைகள், வேலை வாய்ப்பு வழங்கியதற்கான போலி அனுமதி ஆணைகள், வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதுபோல் உத்தரவிடப்பட்ட போலி ஆவணங்களை போலீஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரி மற்றும் மாநில அரசு அதிகாரி பெயரிலான போலி முத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான சங்கர் ராஜா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக் கப்பட்டவர். ஜாமீனில் வெளியே வந்தவர் மீண்டும் மோசடியில் ஈடுபட்டு கைதாகி உள்ளார்.
மோசடி செய்த பணத்தில் வாங்கி குவித்த 3 சொகுசு கார்கள், ரூ.2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக மோட்டார் சைக்கிள் உள்பட 9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும்.
மோசடி கும்பல் மீது ஆள்மாறாட்டம், மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இவர்களை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி போலீசார் நேற்று இரவு கோவை மத்திய சிறையில் அடைத்தனர். பொதுமக்கள் இதுபோன்ற கும்பலிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று போலீஸ் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.