ஆன்–லைன் திருமண தகவல் மையம் மூலம் பழகி பெண்ணிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்த நைஜீரியர் கைது


ஆன்–லைன் திருமண தகவல் மையம் மூலம் பழகி பெண்ணிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்த நைஜீரியர் கைது
x
தினத்தந்தி 14 Sep 2017 10:43 PM GMT (Updated: 14 Sep 2017 10:43 PM GMT)

ஆன்– லைன் திருமண தகவல் மையம் மூலம் பழகி பெண்ணிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்த நைஜீரியர் கைது செய்யப்பட்டார்.

தானே,

ஆன்– லைன் திருமண தகவல் மையம் மூலம் பழகி பெண்ணிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்த நைஜீரியர் கைது செய்யப்பட்டார்.

ரூ.1½ லட்சம் அனுப்பினார்

தானேயை சேர்ந்த 31 வயது பெண் ஆன்–லைன் திருமண தகவல் மையத்தில் தனது பெயரை பதிவு செய்து வரன் தேடிவந்தார். இவருக்கு சமீபத்தில் வெளிநாட்டு வாழ் இந்தியர் என கூறிக்கொண்டு ஒருவர் திருமண தகவல் மையம் மூலம் அறிமுகம் ஆனார். அவர், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். ஒருநாள் அவர் அந்த பெண்ணை பார்க்க இந்தியா வருவதாக கூறினார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று பெண்ணின் செல்போன் எண்ணிற்கு அழைப்பு வந்தது. அப்போது பேசிய அந்த நபர், டெல்லி விமானநிலையத்தில் அதிக அளவிலான பொருட்களுடன் அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டதாகவும், ரூ.1½ லட்சம் அபராதம் செலுத்தினால் மட்டுமே தன்னால் தானேக்கு வரமுடியும் என கூறினார். இதைநம்பிய பெண் அவர் கூறிய வங்கிக்கணக்கிற்கு ரூ.1½ லட்சத்தை அனுப்பினார்.

நைஜீரியர் கைது

அதன்பிறகு பெண்ணால் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண், இது குறித்து வாக்ளே எஸ்டேட் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், டெல்லியில் வசித்து வரும் நைஜீரியர் ஒருவர் ஆன்–லைன் திருமண தகவல் மையத்தில் போலி கணக்கு தொடங்கி அந்த பெண்ணை மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து டெல்லி சென்ற தானே போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நைஜீரியர் இதே பாணியில் மேலும் 2 பெண்களை ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story