குடோன்களில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது


குடோன்களில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 Sep 2017 10:00 PM GMT (Updated: 23 Sep 2017 7:50 PM GMT)

மதுரையில் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ தடை செய்யப்பட்ட பாக்கு, புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

மதுரை,

மதுரையில் நகரில் தடை செய்யப்பட்ட பாக்கு உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து மாநகர போலீஸ் கமி‌ஷனர் மகேஷ்குமார் அகர்வால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் டவுன்ஹால்ரோடு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்காரரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கரிமேடு பகுதியை சேர்ந்த பிரபு(வயது 30) என்பவரிடம் வாங்கியதாக தெரிவித்தார். அவர் மூலம் ஏஜெண்டு முருகன்(36) என்பவரை பிடித்து புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 குடோன்களை கண்டுபிடித்தனர்.

அங்கு சென்ற போலீசார் சுமார் 400 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளிட்ட பொருட்கள் மற்றும் 13 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். பின்னர் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், பிரபு ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் இதில் தொடர்புடைய மற்றொரு ஏஜெண்டு விஜயன் என்பவரை தேடி வருகிறார்கள்.


Next Story