சாம்ராஜ்நகர் நகரசபை தலைவர் பதவி தேர்தல்


சாம்ராஜ்நகர் நகரசபை தலைவர் பதவி தேர்தல்
x
தினத்தந்தி 24 Sept 2017 3:32 AM IST (Updated: 24 Sept 2017 3:32 AM IST)
t-max-icont-min-icon

சாம்ராஜ்நகர் நகரசபை தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷோபா புட்டசாமி வெற்றி பெற்றார்.

கொள்ளேகால்,

சாம்ராஜ்நகர் நகரசபை தலைவியாக இருந்த ரேணுகா நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி பணிகளை முறையாக நிறைவேற்றவில்லை என உறுப்பினர்கள் குற்றம் சாட்டி வந்தனர். எனவே பெரும்பான்மை நகரசபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நகரசபை தலைவி பதவியில் இருந்து ரேணுகாவை விலக்கி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.

இந்த தீர்மானத்திற்கு தடைகோரி ரேணுகா தாக்கல் செய்த மனுவிற்கு சாம்ராஜ்நகர் மாவட்ட நீதிமன்றம் உறுப்பினர்களின் முடிவுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. இதனால் நகரசபை நிர்வாகம் முடங்கியது.

எனவே நகரசபை தலைவர் பதவிக்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரி ரூபாவிற்கு நகரசபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைதொடர்ந்து நகரசபைக்கு புதிதாக தலைவர் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நகரசபை தலைவருக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் 31– வது வார்டு உறுப்பினர் ஷோபா புட்டசாமியும், பா.ஜனதா கட்சி சார்பில் ராஜசேகர மூர்த்தியும் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் நகரசபை தலைவரை தேர்ந்து எடுக்க தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராஜசேகர மூர்த்தியை தோற்கடித்து, ஷோபா புட்டசாமி வெற்றி பெற்றார். 33 உறுப்பினர்கள் உள்ள சாம்ராஜ்நகர் நகரசபையில் ஷோபா புட்டசாமியை ஆதரித்து 17 பேர் வாக்களித்தனர். தேர்தலில் வெற்றிப்பெற்ற ஷோபா புட்டசாமி நிருபர்களிடம் கூறுகையில் நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என கூறினார்.

1 More update

Next Story