கூவத்தூர் அருகே மின்சாரம் தாக்கி மீனவர் பலி உறவினர்கள் மறியல்


கூவத்தூர் அருகே மின்சாரம் தாக்கி மீனவர் பலி உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 24 Sep 2017 10:30 PM GMT (Updated: 2017-09-25T01:18:13+05:30)

கூவத்தூர் அருகே மின்சாரம் தாக்கி மீனவர் பலியானார். இதையடுத்து அவரது உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்பாக்கம்,

கூவத்தூரை அடுத்த வடபட்டினம் பழைய நடுகுப்பத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 40). மீனவர். நேற்று முன்தினம் மாலை அந்த பகுதியில் உள்ள கடற்கரைக்கு நடந்து சென்றார். அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியில் மிதித்ததில் சிவகுமார் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு கூவத்தூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அவ்வாறு செல்லும் வழியிலேயே சிவகுமார் இறந்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவகுமாரின் உறவினர்கள், மின் ஊழியர்களின் அலட்சியத்தால்தான் சிவகுமார் மின்சாரம் தாக்கி இறந்தார் என்று கூறி அவரது உடலை எடுத்து செல்லாமல் ஆஸ்பத்திரிக்கு முன்பு வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கிழக்கு கடற்கரை சாலை கூவத்தூர் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் தாசில்தார் ராமச்சந்திரன் கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னையா மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story