சித்தோட்டில் கார் விற்பனை பிரதிநிதி வீட்டில் 9 பவுன் நகை–பணம் கொள்ளை


சித்தோட்டில் கார் விற்பனை பிரதிநிதி வீட்டில் 9 பவுன் நகை–பணம் கொள்ளை
x
தினத்தந்தி 30 Sep 2017 10:00 PM GMT (Updated: 30 Sep 2017 8:36 PM GMT)

சித்தோட்டில் கார் விற்பனை பிரதிநிதி வீட்டில் 9 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பவானி,

பவானி அருகே உள்ள சித்தோடு பகுதியை சேர்ந்தவர் முகமது அலி ஜின்னா (வயது 40). இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 27–ந் தேதி குடும்பத்துடன் ஊட்டி சென்றிருந்தார். பின்னர் நேற்று முன்தினம் அதிகாலை வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது அலி ஜின்னா உள்ளே சென்று பார்த்தார். அங்கு வீட்டின் பீரோவும் உடைக்கப்பட்டு திறந்திருந்தது. அதிலிருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவை பார்த்தபோது அதில் வைக்கப்பட்டு இருந்த 9 பவுன் நகையையும், ரூ.90 ஆயிரத்தையும் காணவில்லை.

யாரோ மர்மநபர்கள் வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்டு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார்கள். பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்த 9 பவுன் நகை மற்றும் ரூ.90 ஆயிரத்தை திருடிவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து முகமது அலி ஜின்னா சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சித்தோடு லட்சுமிநகர், ராயர்பாளையம், கொங்கம்பாளையத்தில் கடந்த 10 நாட்களாக தொடர் திருட்டு நடந்து வருகிறது. வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் மர்மநபர்கள் உள்ளே புகுந்து பணம், நகையை திருடிவிட்டு சென்று வருகிறார்கள். இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளார்கள்.


Next Story