ஒயர்லஸ்–செல்போன் கோபுரங்களில் ஏறி தற்கொலைக்கு முயன்ற தே.மு.தி.க.வினர் 5 பேர் கைது
விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலையில் ஒயர்லஸ் மற்றும் செல்போன் கோபுரங்களில் ஏறி, தற்கொலைக்கு முயன்ற தே.மு.தி.க.வினர் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி,
விவசாயிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கான பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் உள்ள போலீஸ் ஒயர்லஸ் கோபுரத்தில் தே.மு.தி.க. நகர இளைஞர் அணி செயலாளர் பெரியசாமி நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் ஏறினார். அவர் கோரிக்கையை வலியுறுத்தி, அந்த கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார்.
இதேபோன்று கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூரில் உள்ள செல்போன் கோபுரத்தில் தே.மு.தி.க. மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் கயத்தாறு– கடம்பூர் ரோட்டில் தனியார் தொழிற்பயிற்சி நிலையம் அருகில் உள்ள செல்போன் கோபுரத்தில் தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் சீனிராஜ் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இதேபோன்று கழுகுமலை– பழங்கோட்டை ரோட்டில் உள்ள தனியார் செல்போன் கோபுரத்தில் தே.மு.தி.க. நகர செயலாளர் வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகிய 2 பேரும் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதையடுத்து கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் தலைமை தாங்கினார். வேளாண்மை துறை இணை இயக்குனர் செல்வராஜ், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் அழகர்சாமி, மாவட்ட அவை தலைவர் கொம்பையா பாண்டியன், நகர செயலாளர் பழனி, பொதுக்குழு உறுப்பினர்கள் பெருமாள்சாமி, பிரகாஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கடந்த 2015–2016–ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை இந்த மாத இறுதிக்குள் விவசாயிகளுக்கு வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து கோவில்பட்டி, நாலாட்டின்புத்தூர், கயத்தாறு, கழுகுமலை ஆகிய 4 இடங்களில் போலீஸ் வயர்லஸ் மற்றும் செல்போன் கோபுரங்களில் ஏறி போராட்டம் நடத்திய தே.மு.தி.க.வினர் 5 பேரும் மதியம் 1.30 மணி அளவில் கீழே இறங்கினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.