புதுச்சேரி அமைச்சரின் உதவியாளர் கொலை வழக்கில் 6 மாதமாக தலைமறைவாக இருந்த அ.தி.மு.க. பிரமுகர் கைது


புதுச்சேரி அமைச்சரின் உதவியாளர் கொலை வழக்கில் 6 மாதமாக தலைமறைவாக இருந்த அ.தி.மு.க. பிரமுகர் கைது
x
தினத்தந்தி 5 Oct 2017 5:00 AM IST (Updated: 5 Oct 2017 1:26 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி அமைச்சரின் உதவியாளர் கொலை வழக்கில் 6 மாதமாக தலைமறைவாக இருந்த அ.தி.மு.க. பிரமுகரை ரெட்டிச்சாவடி போலீசார் நேற்று கைது செய்தனர்.

ரெட்டிச்சாவடி,

புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வீரப்பன்(வயது 45). காங்கிரஸ் கட்சி பிரமுகர். இவர் புதுச்சேரி அமைச்சர் கந்தசாமியின் உதவியாளராக இருந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் அ.தி.மு.க. பிரமுகரான கோவிந்தராஜ் (43) ஆவார்.

இவர் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, கோவிந்தராஜ் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த தேர்தலின் போது கந்தசாமிக்கு ஆதரவாக வீரப்பன் இருந்து வந்தார். இதன் காரணமாக, கோவிந்தராஜிக்கும், வீரப்பனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 3–ந்தேதி ரெட்டிச்சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வீரப்பனை மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து வெட்டி சாய்த்தது. இதில் சம்பவ இடத்திலேயே வீரப்பன் ரத்த வெள்ளத்தில் பலியானார். இதையடுத்து கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக ரெட்டிச்சாவடி போலீசார் கோவிந்தராஜ் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 9 பேரை உடனடியாக கைது செய்தனர். மேலும் கோவிந்தராஜ் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இதையடுத்து கோவிந்தராஜ் தலைமறைவானார்.

இந்த நிலையில் கோவிந்தராஜியுடன் தொடர்புடையவர்களின் செயல்பாடுகளை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், அவர் புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ரெட்டிச்சாவடி போலீசார் விரைந்து சென்று, கோவிந்தராஜை சுற்றிவளைத்து கைது செய்தனர். கடந்த 6 மாதமாக தலைமறைவாக இருந்து வந்த, கோவிந்தராஜ் தற்போது போலீசில் சிக்கி உள்ளார். மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story