எரிந்த நிலையில் பிணமாக கிடந்த பெண் கொலையில் ஆந்திர கள்ளக்காதலன் கைது


எரிந்த நிலையில் பிணமாக கிடந்த பெண் கொலையில் ஆந்திர கள்ளக்காதலன் கைது
x
தினத்தந்தி 5 Oct 2017 6:01 AM IST (Updated: 5 Oct 2017 6:01 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை அருகே எரிந்த நிலையில் பிணமாக கிடந்த பெண் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண் வேறு ஒருவருடன் தொடர்பு வைத்ததால் கள்ளக்காதலனே கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை சிப்காட் அருகே உள்ள தனியார் பள்ளியின் பின்புறம் கடந்த மாதம் 22–ந் தேதி அடையாளம் தெரியாத நிலையில் சுமார் இளம்பெண் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த சிப்காட் போலீசார் விரைந்து சென்று பிணமாக கிடந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்தனர். பாதி எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இளம்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சிப்காட் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த மெய்யழகன் என்பவர் தனது மகள் கனகாவை கடந்த சில நாட்களாக காணவில்லை என தேடி வந்தார். எரிந்த நிலையில் பெண் பிணமாக கிடந்தது குறித்து அறிந்த மெய்யழகன், அரசு மருத்துவமனையில் உடலை பார்த்து பிணமாக கிடந்தது தனது மகள் கனகா தான் என்பதை உறுதி செய்தார்.

இதையடுத்து கனகாவின் தந்தை மெய்யழகன் மற்றும் பலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஆந்திர மாநிலம், பிச்சாடூரை அடுத்த காரூர் பகுதியை சேர்ந்தவரும், இவரது உறவினருமான லோகேஷ் (19) என்பவர் கனகாவை கொலை செய்திருக்கலாம் என்ற தகவல் கிடைத்தது.

இதையடுத்து லோகேஷை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கனகாவை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கைதான லோகேஷ் போலீசாரிடம் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில் லோகேஷ் கூறியுள்ளதாவது :–

கனகாவிற்கும் ஆந்திர அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்க்கும் தேசய்யா (29) என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நவீன்குமார் (9), லோகேஷ் (4) என 2 மகன்கள் உள்ளனர்.

கனகாவிற்கும், அவரது கணவர் தேசய்யாவின் உறவினருமான எனக்கும் கள்ளதொடர்பு ஏற்பட்டது. நான் 12–ம் வகுப்பு படித்து விட்டு தனியார் பொருள்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் பேக்கிங் பிரிவில் வேலை பார்த்து வருகிறேன். எனக்கு இன்னமும் திருமணமாகவில்லை. எனக்கும், கனகாவிற்கும் கள்ளத்தொடர்பு இருந்த வி‌ஷயம் அவரது கணவர் தேசய்யாவிற்கு தெரிந்து விட்டது. இதனால் ஏற்பட்ட தகராறில் கனகா அவரது கணவரை பிரிந்து சிப்காட்டில் உள்ள அவரது தந்தை வீட்டிற்கு வந்து விட்டார். இங்கு அவர் தோல் தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தார்.

நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் எனக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை கிடைக்கும். அந்த நாட்களில் நான் ஆந்திராவில் இருந்து சிப்காட் வந்து கனகாவுடன் உல்லாசம் அனுபவித்து செல்வேன்.

அவர் தோல் தொழிற்சாலைக்கு வேலை சென்றிருந்த நாட்களிலும் நான் வந்திருக்கும் செய்தியை போன் மூலம் கூறியவுடன் அவர் வேலை பார்க்கும் தொழிற்சாலையில் உடல் நலக்குறைவு என பொய்யாக கூறி என்னிடம் வந்து விடுவார். பின்னர் நாங்கள் 2 பேரும் உல்லாசமாக இருப்போம்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 20–ந் தேதி நாங்கள் வழக்கமாக சந்திக்கும் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் பள்ளி பின்புறம் கனகாவை வரவைத்து சந்தித்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவரை உல்லாசம் அனுபவிக்க அழைத்த போது உடல்நலக்குறைவு என கூறி தவிர்த்து விட்டார்.

அப்போது கனகாவின் செல்போனுக்கு தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது. அதனை கனகா துண்டித்துக்கொண்டே இருந்தார். யாரிடமிருந்தோ அழைப்பு போன் வந்து கொண்டே இருக்கிறது என கேட்டேன். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.

சந்தேகமடைந்து செல்போனை வாங்கி பார்த்த போது செல்போனில் பேசிய நபர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சதீஷ் (25) என்பது தெரிய வந்தது. கனகாவிடம் விசாரித்த போது சதீசுடனும் கனகா கள்ளதொடர்பு வைத்திருந்தது தெரிய வந்தது. சதீசுக்கும் இன்னும் திருமணமாகவில்லை.

‘‘உனக்காக, நான் திருமணம் செய்து கொள்ளாமல் செலவு செய்து வருகிறேன். உன்னையும் சந்தோ‌ஷமாக வைத்து கொண்டுள்ளேன். இந்த நிலையில் இன்னொரு வாலிபருடன் கள்ளதொடர்பு வைத்திருப்பதா’’ என கேட்டு ஆத்திரம் அடைந்து அவரது கன்னத்தில் அறைந்தேன். இதில் கனகா சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

அதிர்ச்சியான நான் கனகாவை மற்றவர்கள் அடையாளம் காணாமல் இருக்க அங்கிருந்த காய்ந்த ஓலைகளை அவர் மீது வைத்து தீ வைத்து எரித்து விட்டு ஆந்திராவில் உள்ள எனது வீட்டிற்கு வந்து விட்டேன். போலீசார் மோப்பம் பிடித்து என்னை கண்டு பிடித்து கைது செய்து விட்டனர்.

இவ்வாறு லோகேஷ் கூறியுள்ளார்.

கள்ளக்காதலி வேறொருவருடன் தொடர்பு வைத்ததால் கள்ளக்காதலனே அவரை கொலை செய்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story