பெண்ணிடம் நூதன முறையில் ரூ.89 ஆயிரம் திருட்டு


பெண்ணிடம் நூதன முறையில் ரூ.89 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 6 Oct 2017 5:24 AM IST (Updated: 6 Oct 2017 5:24 AM IST)
t-max-icont-min-icon

சேத்துப்பட்டு அருகே பெண்ணிடம் நூதன முறையில் ரூ.89 ஆயிரம் மற்றும் ஒரு பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

சேத்துப்பட்டு,

சேத்துப்பட்டு அருகே பெண்ணிடம் நூதன முறையில் ரூ.89 ஆயிரம் மற்றும் ஒரு பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேத்துப்பட்டு அருகே நம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சங்கர், ஆத்திரை ஊராட்சியில் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுலோசனா (வயது 45). இவர் நேற்று காலை தனது மொபட்டில் சேத்துப்பட்டு, செஞ்சி ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் 8 பவுன் நகையை அடமானம் வைப்பதற்காக சென்றார்.

அங்கு அவர் நகையை அடமானம் வைத்து விட்டு ரூ.99 ஆயிரத்தை வாங்கி கொண்டு மொபட்டில் ஆரணி ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு அடமானத்தில் உள்ள நகையை திருப்புவதற்காக வந்தார். அந்த நகையை திருப்புவதற்காக தனியாக ரூ.27 ஆயிரம் கொண்டு வந்திருந்தார். அந்த பணத்தை வைத்து அடமானத்தில் இருந்த ஒரு பவுன் நகையை மீட்டார்.

இதற்கிடையில் சுலோசனா, தச்சாம்பாடி ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் சிவாவுக்கு கொடுக்க வேண்டிய ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார்.

இதையடுத்து சுலோசனா கையில் வைத்திருந்த ரூ.89 ஆயிரம் மற்றும் ஒரு பவுன் நகையை கைப்பையில் வைத்தார். அந்த கைப்பையை மொபட்டில் இருந்த கொக்கியில் தொங்கவிட்டு, அவர் மொபட்டை தள்ளினார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மொபட்டின் அருகே கீழே கிடந்த 10 ரூபாய் நோட்டுகள் காண்பித்து, இது உங்கள் பணமா? என்று சுலோசனாவிடம் கேட்டு உள்ளனர்.

பின்னர் அவர் அந்த பணத்தை எடுப்பதற்குள் மொபட்டில் இருந்த கைப்பையை மர்ம நபர்கள் திருடிக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். பணத்தையும், நகையையும் பறி கொடுத்த சுலோசனா கத்தி கூச்சலிட்டு கதறி அழுதார்.

பின்னர் அவர் சேத்துப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் பார்வையிட்டு மர்ம நபர்கள் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்ணிடம் நூதன முறையில் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story