நிலுவை வழக்குகளை வகைப்படுத்தி விரைவில் தீர்வு காணவேண்டும்
நிலுவையில் உள்ள வழக்குகளை வகைப்படுத்தி விரைவில் தீர்வுகாண வேண்டும் என்று காங்கேயத்தில் நடந்த புதிய சார்பு நீதிமன்ற திறப்பு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் பேசினார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் புதிய சார்பு நீதிமன்றம், ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய சார்பு நீதிமன்றத்தின் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஏ.எம்.பஷீர் அகமது, எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமார், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய சார்பு நீதிமன்றத்துக்கான கல்வெட்டை திறந்து வைத்தனர்.
பின்னர் புதிய சார்பு நீதிமன்றத்தில், சார்பு நீதிபதியாக புவனேஸ்வரி பொறுப்பேற்று வழக்கு விசாரணை நடத்தினார். இதை ஐகோர்ட்டு நீதிபதிகள், அமைச்சர் ஆகியோர் பார்வையிட்டார்கள்.
இதைத்தொடர்ந்து தொடக்க விழா நிகழ்ச்சிகள் கரூர் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை திருப்பூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அலமேலு நடராஜன் வரவேற்றார். விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் பேசியதாவது:–
நீதிபதிகள், வக்கீல்கள் இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கத்தை போன்றவர்கள். இவர்கள் இருவரும் ஒருங்கிணைந்து செயல்படும்போது தான் வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண முடியும். நீதித்துறையில் பணிகள் சிறப்பாக நடைபெறுவதற்கு வக்கீல்களின் ஒத்துழைப்பு என்பது மிகவும் முக்கியம். ஒற்றுமையே வலிமை என்பதை புரிந்து கொண்டு அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றும்போதே முழு வெற்றியை நாம் பெற முடியும். திருப்பூர் மாவட்டத்தில் தற்போது தொடங்கப்பட்டுள்ள கோர்ட்டுடன் மொத்தம் 30 கோர்ட்டுகள் உள்ளன. விரைவில் மேலும் 2 கோர்ட்டுகள் தொடங்கப்பட உள்ளது. மாவட்டம் வாரியாக கோர்ட்டுகளில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறோம். 5 முதல் 7 ஆண்டுகள் நிலுவையில் உள்ள வழக்குகள், 7 முதல் 10 ஆண்டுகள் நிலுவையில் உள்ள வழக்குகள், 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வழக்குகள் என்று வகைப்படுத்தி அந்த வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண அறிவுறுத்தியுள்ளோம்.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை திருப்பூர் மாவட்டத்தில் நிலுவையில் இருந்த 199 குற்ற வழக்குகளுக்கும், 120 சிவில் வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. இது தமிழக அளவில் திருப்பூர் மாவட்ட நீதித்துறை முதன்மை இடத்தை பிடித்தது. மேலும் மாவட்டத்தில் 5 வருடங்களுக்கு மேல் 10 ஆயிரத்து 375 குற்ற வழக்குகளும், 11 ஆயிரத்து 618 சிவில் வழக்குகளும் நிலுவையில் உள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்தாலும் தொடர்ந்து வழக்குகள் வந்து கொண்டு தான் இருக்கும். அது மக்கள் நீதிமன்றத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசும்போது, “காங்கேயம் காளையை போல் காங்கேயத்தில் தொடங்கப்பட்ட புதிய சார்பு நீதிமன்றமும் உத்வேகத்துடன் செயல்பட்டு வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காணும். நீதிபதிகள், வக்கீல்கள் முன்னோடியாக செயல்படும்போது நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு நம்பகத்தன்மை மேலும் அதிகரிக்கும்“ என்றார்.
ஐகோர்ட்டு நீதிபதி ஏ.எம்.பஷீர் அகமது பேசும்போது, “இளம் வக்கீல்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். வழக்கின் தன்மையை பொறுத்து தேவைப்படும் நேரத்தில் மட்டுமே வாய்தா பெற வேண்டும். பல தரப்பட்ட மக்களை சந்திக்கும் வக்கீல்களுக்கும், நீதிபதிகளுக்கும் பொறுமை மிகவும் அவசியம். அவர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டும்“ என்றார். முடிவில் காங்கேயம் சார்பு நீதிபதி புவனேஸ்வரி நன்றி கூறினார்.
விழாவில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா, ஈரோடு எம்.பி. செல்வகுமார சின்னையன், மாவட்ட கூடுதல் நீதிபதிகள் முகமது ஜியாபுதீன், ஜமுனா, காங்கேயம் பார் அசோசியேசன் தலைவர் வெங்கடசுப்பு, செயலாளர் தங்கமணி மற்றும் வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து வந்து கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசும்போது, “நீதிமன்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் முதன்முதலாக நான் வேட்டி, சட்டை அணிந்து கலந்து கொண்ட விழா இதுவாகும். காங்கேயம் என்றால் காளைக்கு பெருமை. காளை என்றால் கம்பீரம், வீரத்துக்கு பெருமை. வெண்மை என்றால் தூய்மை, அன்பு, திறமையை குறிக்கும். இங்குள்ள பெரும்பாலானவர்கள் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிவது வழக்கம். அதனால் இங்கு நடைபெறும் இந்த விழாவில் நானும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து பங்கேற்கிறேன். இந்த மண்ணின் மைந்தன் நான் என்பதில் பெருமையடைகிறேன்“ என்றார்.