கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் பிரபல ரவுடிக்கு தொடர்பு
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் பிரபல ரவுடிக்கும், அவருடைய கூட்டாளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக சிறப்பு விசாரணை குழுவினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.
மங்களூரு,
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் பிரபல ரவுடிக்கும், அவருடைய கூட்டாளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக சிறப்பு விசாரணை குழுவினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.
பெங்களூரூவில் பெண் பத்திரிகையாளரும், எழுத்தாளருமான கவுரி லங்கேசை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் கர்நாடகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் குறித்து விசாரித்து கொலையாளிகளை பிடிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.சிறப்பு விசாரணைக்குழுவினர் தற்போது பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில், தட்சிண கன்னடா மாவட்டம் கடபா பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜெயப்பிரகாஷ் என்கிற அண்ணாவுக்கும் மற்றும் அவருடைய கூட்டாளிகள் மராட்டிய மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்த பிரவீன் லிம்கர், புனேயைச் சேர்ந்த சரங்க் அகோல்கர், மராட்டிய மாநிலம் சங்கிலி மாவட்டத்தைச் சேர்ந்த ருத்ரா பட்டீல், சடாரா மாவட்டத்தைச் சேர்ந்த வினய் பவார் ஆகியோருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சிறப்பு விசாரணைக்குழுவினருக்கு திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.மேலும் இவர்கள் 5 பேருக்கும் ஏற்கனவே கோவா மற்றும் மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் மாலேகான் பகுதியில் கடந்த 2009–ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதுமட்டுமல்லாமல் ருத்ரா பட்டீல், சரங்க் அகோல்கர் மற்றும் வினய் பவார் ஆகியோருக்கு, கடந்த 2013–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20–ந் தேதி மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் எழுத்தாளர் நரேந்திர தோபால்கர் கொல்லப்பட்ட வழக்கிலும், கடந்த 2015–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16–ந் தேதி எழுத்தாளர் கோவிந்த் பன்சாரே கொலை செய்யப்பட்ட வழக்கிலும், ஆகஸ்டு 30–ந் தேதி தார்வாரில் கன்னட எழுத்தாளர் எம்.எம்.கலபுரகி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கிலும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.ஏற்கனவே இந்த வழக்குகளை சி.பி.ஐ. விசாரித்து வருவதும் சிறப்பு விசாரணை குழுவினருக்கு தெரிந்தது. இதையடுத்து நேற்று சிறப்பு விசாரணை குழுவினர் பெங்களூருவில் இருந்து தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு சென்றனர். அவர்கள் முதலில் கடபா போலீஸ் நிலையத்திற்கு சென்று ரவுடி ஜெயப்பிரகாஷ் குறித்த தகவல்களை சேகரித்தனர். ஜெயப்பிரகாசின் இருப்பிடம், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் உள்பட பல்வேறு தகவல்களை சிறப்பு விசாரணை குழுவினர் சேகரித்தனர்.
பின்னர் அவரை சிறப்பு விசாரணை குழுவினர் தேடிச்சென்றனர். ஆனால் அதற்குள் அவர் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து சிறப்பு விசாரணை குழுவினர் ஜெயப்பிரகாசின் குடும்ப உறுப்பினர்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் அவர் குறித்து விசாரணை நடத்தினர்.அப்போது கோவா மற்றும் மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் இருந்து ஜெயப்பிரகாஷ் தலைமறைவாக இருந்து வருவதும், அவரை தேசிய விசாரணை முகமை மற்றும் இன்டர்போல் போலீசார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரை தேடிவருவதும் தெரியவந்தது. இதையடுத்து சிறப்பு விசாரணை குழுவினர் மங்களூருவில் முகாமிட்டுள்ளனர். ஜெயப்பிரகாஷ் எப்படியும் தனது குடும்ப உறுப்பினர்களையோ அல்லது கூட்டாளிகளையோ பார்க்க வரலாம். அப்போது அவரை பிடித்து விடலாம் என்று சிறப்பு விசாரணை குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.