தொடர் மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பரிதவித்த பொதுமக்கள்


தொடர் மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பரிதவித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 11 Oct 2017 11:30 PM GMT (Updated: 11 Oct 2017 1:02 PM GMT)

வேலூரில் பெய்த தொடர் மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தததால் பொதுமக்கள் பரிதவிப்புக்குள்ளாயினர்.

வேலூர்,

வேலூரில் பெய்த தொடர் மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தததால் பொதுமக்கள் பரிதவிப்புக்குள்ளாயினர். மேலும் 2 பள்ளிகளை வெள்ளம் சூழ்ந்ததால் அந்த பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் கடந்தசில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏரி, குளங்களும் நிரம்பி வருகின்றன. வேலூர் பகுதியில் பலத்த மழைபெய்யும்போது பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் இரவில் தூங்கமுடியாமல் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவிலும் பலத்த மழை கொட்டியது. இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கால்வாய்களில் கழிவுநீருடன் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

வேலூர் முள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள வீராசாமி தெரு, திடீர் நகர் மற்றும் கன்சால்பேட்டை இந்திரா நகர், ஆஞ்சநேயர் கோவில்தெரு பகுதிகளில் உள்ள 100–க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் நள்ளிரவில் மழைவெள்ளம் புகுந்தது. தெருக்களிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் வீடுகளில் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்தனர்.

வேலூர் வழியாக செல்லும் நிக்கல்சன் கால்வாயில் சில இடங்களில் தடுப்பு சுவர் கட்டாததால் தண்ணீர் பெருக்கெடுத்து வரும்போது அதில் இருந்து வெளியேறி வீடுகளுக்குள் புகுந்துவிடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். தெருக்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்தினால்தான் வீடுகளுக்குள் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றமுடியும். எனவே மாநகராட்சி அதிகாரிகள் தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

முள்ளிப்பாளையத்தில் பாரதி நிதிஉதவி தொடக்கபள்ளியும், ஜனசக்தி நடுநிலை பள்ளியும் இயங்கி வருகின்றன. நேற்று முன்தினம் பெய்த பலத்தமழைகாரணமாக இந்த 2 பள்ளிகளையும் மழைவெள்ளம் சூழ்ந்தது. இதனால் நேற்று காலை பள்ளிகளுக்கு வந்த ஆசிரியர்கள் பள்ளிகளை திறக்கமுடியாமல் திரும்பி சென்றனர். வழக்கம்போல பள்ளிக்கு வந்த மாணவ– மாணவிகளும் பள்ளிக்கு செல்லமுடியாமல் தண்ணீர் சூழ்ந்திருந்ததாலும், பள்ளிகள் திறக்கப்படாததாலும் வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.

இந்த பகுதியில் உள்ள வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வீடுகளுக்குள் பாம்புகள் வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

அதேபோன்று காட்பாடியில் வி.ஜி.ராவ் நகர் பகுதியில் உள்ள வீடுகளையும் மழைவெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்குள்ள 3 பள்ளிகளுக்கு இந்த வழியாகத்தான் மாணவ– மாணவிகள் சென்று வருகிறார்கள். தற்போது மழைவெள்ளம் சூழ்ந்துள்ளதால் மாணவ– மாணவிகள் பள்ளிகளுக்கு செல்லமுடியவில்லை. பொதுமக்களும் வீடுகளில் இருந்து வெளியே செல்லமுடியவில்லை. இதனால் அவர்கள் பரிதவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:–

குடியாத்தம்–93, வேலூர்–17.8, ஆம்பூர்–3.6, வாணியம்பாடி–20, அரக்கோணம்–62.6, காவேரிப்பாக்கம–26, வாலாஜா–18, சோளிங்கர்–10, திருப்பத்தூர்–47.3, ஆற்காடு–58, மேலஆலத்தூர்–89.4


Next Story