தீபாவளியை முன்னிட்டு திண்டுக்கல் உள்பட 11 ஊர்களில் ஒலி– காற்று மாசு அளவீடு இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க தடை


தீபாவளியை முன்னிட்டு திண்டுக்கல் உள்பட 11 ஊர்களில் ஒலி– காற்று மாசு அளவீடு இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க தடை
x
தினத்தந்தி 14 Oct 2017 4:27 AM IST (Updated: 14 Oct 2017 4:27 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் தீபாவளியையொட்டி திண்டுக்கல் உள்பட 11 ஊர்களில் ஒலி– காற்று மாசு அளவீடு செய்யப்படுகிறது. மேலும் இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்,

தீபாவளி பண்டிகையில் விருந்து மற்றும் இனிப்புடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசு வெடிப்பது, காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. பண்டிகை மற்றும் விழா காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் ஒலி தற்காலிகமாக செவித்திறனை பாதிக்கும். தொடர் ஓசை நிரந்தரமாக கேட்கும் திறனை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கிடையே அதிக ஒலி மற்றும் ஒளியுடன் கூடிய பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசை தடுக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் கடந்த 2005–ம் ஆண்டு கூறிய தீர்ப்பில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை தயாரிக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சுப்ரீம் கோர்ட்டு வலியுறுத்தியது.

இந்த நிலையில் கடந்த 28.10.2015 அன்று மற்றொரு வழக்கில் வழங்கிய தீர்ப்பில், 2005–ம் ஆண்டின் தீர்ப்பை சரியாக அமல்படுத்த அறிவுறுத்தியது. அதன்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆண்டு தோறும் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி, காற்று மாசு குறித்தும், விபத்து இல்லாத தீபாவளியை கொண்டாடவும் விழிப்புணர்வு செய்து வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாள் மற்றும் தீபாவளி தினம் ஆகிய 2 நாட்கள் சென்னை, மதுரை, சேலம், திருச்சி, கோவை, நெல்லை, திண்டுக்கல், வேலூர், திருப்பூர், ஓசூர் மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் ஒலி மற்றும் காற்று மாசு அளவீடு செய்ய ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் பட்டாசுகளில் இருக்கும் வேதிப்பொருள் மற்றும் ஒலி அளவு விபரத்தை பட்டாசு பெட்டியில் குறிப்பிட வேண்டும். வெடிக்கும் போது 4 மீட்டர் தூரத்தில் 125 டெசிபல் (ஏ–1 அளவு) அல்லது 145 டெலிபல் (சி அளவு) அளவுக்கு அதிகமாக ஒலி ஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பும் பட்டாசுகளை கண்டிப்பாக வெடிக்கக் கூடாது. 125 டெசிபல் அளவுக்கு கீழ் ஒலி உடைய பட்டாசுகளை மட்டுமே பொதுமக்கள் வெடிக்க வேண்டும்.

தீபாவளி பண்டிகையை குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பாக, சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் கொண்டாட வேண்டும். ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை முற்றிலும் தவிர்த்து தீபங்களால் தீபாவளியை கொண்டாட வேண்டும். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

இவ்வாறு அதில் கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.


Next Story