அமித் ஷா மகன் மீது விசாரணை நடத்தக்கோரி இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
அமித் ஷா மகன் மீது விசாரணை நடத்தக்கோரி இளைஞர் காங்கிரசார் மும்பையில் உள்ள சிவசேனா, பா.ஜனதா எம்.பி.க்கள் அலுவலகம் முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பை,
மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் அமித் ஷா மகன் ஜெய் அமித் பயன் அடைந்ததாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டிய நிலையில், அதுபற்றி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்னரே ரூ.6 லட்சம் கோடி வரை டெபாசிட் ஆனது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டி நேற்று மும்பையில் இளைஞர் காங்கிரசார் சிவசேனா எம்.பி.க்கள் ராகுல் செவாலே, கஜானன் கிரீத்திகர் மற்றும் பா.ஜனதா எம்.பி.க்கள் பூனம் மகாஜன், கோபால் ஷெட்டி ஆகியோரது அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செம்பூரில் உள்ள ராகுல்செவாலே எம்.பி.யின் அலுவலகம் முன் இளைஞர் காங்கிரசார் மும்பை இளைஞர் காங்கிரஸ் தலைவர் கணேஷ்குமார் மற்றும் தென்மத்திய மும்பை இளைஞர் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மிஸ்திரி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதுபற்றி அறிந்ததும் சிவசேனாவினர் அங்கு திரண்டனர். அப்போது அவர்கள் காங்கிரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனால் அங்கு பதற்றம் உண்டானது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருதரப்பினரையும் தடுத்து நிறுத்தினர்.
கஜானன் கிரீத்திகர் எம்.பி. அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்த இளைஞர் காங்கிரசார் அவரை அலுவலகத்தில் சந்தித்து மேற்படி கோரிக்கைகள் தொடர்பான மனுவை கொடுத்தனர்.
இதுபோல பூனம் மகாஜன் எம்.பி. மற்றும் கோபால் ஷெட்டி எம்.பி. ஆகியோரது அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசாரை போலீசார் பிடித்து சென்றனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.