நீதிபதி வீட்டில் நகை, பணம் கொள்ளை மர்ம மனிதர்கள் கைவரிசை


நீதிபதி வீட்டில் நகை, பணம் கொள்ளை மர்ம மனிதர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 16 Oct 2017 11:00 PM GMT (Updated: 16 Oct 2017 10:14 PM GMT)

கடலூர் அருகே நீதிபதி வீட்டில் நகை, பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

நெல்லிக்குப்பம்,

சென்னை எழும்பூர் கோர்ட்டில் நீதிபதியாக இருப்பவர் ரகுமான் (வயது 43). இவருக்கு கடலூர் அருகே உண்ணாமலை செட்டி சாவடியில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. அவ்வப்போது விடுமுறை நாட்களில் மட்டும், ரகுமான் இங்கு வந்து செல்வார்.

கடந்த 2-ந் தேதி தனது குடும்பத்தினருடன் ரகுமான் இங்கு வந்திருந்தார். பின்னர் வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று ரகுமான் சென்னையில் இருந்து உண்ணாமலை செட்டிசாவடியில் உள்ள தனது வீட்டுக்கு குடும்பத்துடன் வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைந்த நிலையில் கிடந்தது.

கொள்ளை

இதை பார்த்து அதிர்ச்சியான அவர், உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்ட நிலையில் அதில் இருந்த 2 பவுன் நகை, வெள்ளிப்பொருட்கள், ரூ.5 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள், பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கடலூரில் இருந்து மோப்பநாய் அர்ஜூன் வரைவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் வரை ஓடி விட்டு திரும்பி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

வலைவீச்சு

வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளையும் கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். நீதிபதி வீட்டில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Related Tags :
Next Story