கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தீபாவளி பொருட்கள் வாங்கிச் சென்ற பொதுமக்கள்


கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தீபாவளி பொருட்கள் வாங்கிச் சென்ற பொதுமக்கள்
x
தினத்தந்தி 17 Oct 2017 4:27 AM IST (Updated: 17 Oct 2017 4:27 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் நனைந்த படியே தீபாவளிக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.

புதுச்சேரி,

தீபாவளி பண்டிகையை என்றாலே புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்து, வீட்டில் இனிப்பு வகைகளை உண்டு மகிழ்வது வழக்கம். இதற்காக பொதுமக்கள் தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தங்கள் குடும்பத்தினருடன் கடை வீதிகளுக்கு சென்று புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் பலகாரம் செய்வதற்கு தேவையான பொருட்களை வாங்குவது வழக்கம்.

இந்த ஆண்டு புதுவையில் உள்ள பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு நேற்று தான் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. எனவே அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேற்று மாலை கடை வீதிகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினர். இதனால் அண்ணாசாலை, நேரு வீதி, காந்திவீதி, மி‌ஷன் வீதி, காமராஜர் சாலை, புஸ்சி வீதியில் மக்கள் கூட்டம் அலை மோதியது. கூட்டம் காரணமாக பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. காலையில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் இதமான சூழல் நிலவியது. மாலையில் சற்று பலத்த மழை பெய்தது. இதனால் குடும்பத்துடன் தீபாவளி பொருட்கள் வாங்கச்சென்ற பொதுமக்கள் அவதிப்பட்டனர். சிலர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்த படியே சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர்.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மட்டுமே காந்தி வீதியில் சன்டே மார்க்கெட் செயல்படும். ஆனால் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் நேற்றும் மார்க்கெட் செயல்பட்டது. இதனால் காந்தி வீதியில் வழக்கத்தை விட அதிக அளவில் மக்கள் கூட்டத்தை காண முடிந்தது.

மாலையில் மழை பெய்தால் சன்டே மார்க்கெட் வியாபாரிகளும், பொருட்கள் வாங்க சென்ற பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.


Next Story